சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனத்திற்கு முரளி விஜய் அளித்த தக்க பதில்..! ரசிகர்கள் ஆதரவு..!

இந்திய மண்ணில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில், இந்த போட்டி குறித்த விவாதத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஈடுபட்டிருந்த வேளையில் தமிழக வீரர் முரளி விஜய் டெஸ்ட் சாதனை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை சஞ்சய் மஞ்சரேக்கர் பதிவிட்டார்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் விளையாடி வந்த நிலையில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடிக்க நெருங்கிய வேளையில் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடர்களில் அரைசதம் அடித்த பின் அதை வெற்றிகரமாக சதமாக மாற்றிய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் தமிழக வீரர் முரளி விஜய் பெயர் இடம்பெற்றிருந்தது.
அப்போது கிரிக்கெட் வர்ணனையாளர் ஆனா சஞ்சய் மஞ்சரேக்கர் முரளி விஜய் உடைய பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக கூறினார், அதாவது சிறந்த பேட்ஸ்மேன் ஆக இல்லாத முரளி விஜய் எப்படி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பதை விமர்சிக்கும் விதமாக நேரலையில் ஒரு பதிவை செய்தார்.
இதற்கு தக்க பதில் அளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை முரளி விஜய் செய்தார், அதில் சில முன்னாள் மும்பை கிரிக்கெட் வீரர்களுக்கு தென்னிந்திய வீரர்களை பாராட்ட தெரியாது என்று கூறினார், அதை ஆதரித்து பல கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி உள்ள முரளி விஜய் 61 டெஸ்ட் போட்டிகளில் 12 சதம் மற்றும் 15 அரைசதம் உட்பட 3982 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் அண்மையில் தான் விஜய் அனைத்து வித சர்வ்தேச தொடர்களில் இருந்து ஓய்வை அறிவித்தார்.