கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி.. | MI vs RR IPL 2023 Match Highlight

ஐபிஎல் 2023 தொடரின் 42வது லீக் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, ராஜஸ்தான் அணி சார்பில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களம் கண்டனர். நிதானமாக விளையாடிய பட்லர் 18 ரன்களில் சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சாம்சன் சிக்சரை அடித்து தூக்கினார். ஆனால், அர்ஷ்த் கான் பந்துவீச்சில் கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த படிக்கல் 2 ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
அவர்களை தொடர்ந்து ஹோல்டர் 11 ரன்களிலும், ஹெட்மயர் 8 ரன்களிலும், ஜுரெல் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், ஆரம்பத்திலிருந்தே சிக்சர், பவுண்டரியுமாய் விளாசி அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் எங்கையோ எகிறியது. சொந்த மண்ணில் சதம் எடுத்த ஜெய்ஸ்வால் 124 (62), இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு முன் சதம் விளாசிய 6வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் விடாமல் அதிரடி காட்டியதால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்திருந்தது.
அதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பேட்டிங் செய்ய தொடங்கிய மும்பை அணியில் பர்த் டே பாய் கேப்டன் ரோகித் சர்மா 3(5) ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 28(23) ரன்கள் சேர்க்க, கேமிரான் கிரீன் 44(26) ரன்கள் சேர்த்தார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். நடப்பு ஐபிஎல் தொடரில் தடுமாறிய சூர்யகுமார் யாதவ் 55(29), தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.
இதனையடுத்து, திலக் வர்மா 29(21), டிம் டேவிட் 45(14) கூட்டணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மும்பை அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை குவித்து ராஜஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் வான்கடே மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி என்ற சாதனை படைத்தது.