WPL 2023 : பிரமாண்டமாக தொடங்கியது மகளிர் பிரீமியர் லீக் தொடர்..!! முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி..!!

இந்திய மண்ணில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் சிறப்பான அதிரடி ஆட்டம் அரங்கேறியது, இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
மகளிர் கிரிக்கெட் விளையாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் மிகவும் கோலாகலமாக முதல்முறையாக மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் தொடங்கப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெத் மூனி தலைமையில் குஜராத் ஜெயின்ட்ஸ் அணியும் மோதினார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயின்ட்ஸ் அணி பவுலிங் செய்ய தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் குறிப்பாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 65(30) ரன்கள் பதிவு செய்தார். மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் அரைசதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் பதிவு செய்து அசத்தியது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயின்ட்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கில் மிகவும் திணறியது, குறிப்பாக அணியின் கேப்டன் பெத் மூனி காயம் அடைந்து ரிடையர் அவுட் பெவிலியன் திரும்பினார், அதன்பின் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் உடனுக்குடன் விரைவாக ஆட்டமிழந்தார்கள்.
மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக சைகா இஷாக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இறுதியாக 15.1 ஓவரில் குஜராத் ஜெயின்ட்ஸ் அணி வெறும் 64 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை பெற்று தரும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.முதல் முறையாக ஆரம்பம் ஆகி உள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் முதல் வெற்றியை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.