WPL 2023 : ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்..!! | mi playoffs update in w ipl 2023

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாக வலம் வரும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 5 வெற்றிகளை பெற்று முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது, இந்த தொடரின் சிறந்த கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் உள்ளார்.
இந்த தொடரில் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற 12 வது லீக் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் விளையாடிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதாவது இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயின்ட்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.
இந்நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணி துவக்க வீராங்கனை யஸ்திகா பாட்டியா 44(37) ரன்கள் பெற்று அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தார், அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 51(30) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் பதிவு செய்த நிலையில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் பதிவு செய்தது. குஜராத் ஜெயின்ட்ஸ் அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த ஆஷ்லே கார்ட்னர் 3 விக்கெட்டுகள் பெற்றார்.
அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயின்ட்ஸ் அணி ஆரம்பம் முதலே மும்பை அணியின் பவுலிங்கில் திணறியது, மேலும் குஜராத் ஜெயின்ட்ஸ் அணி வீராங்கனைகள் உடனுக்குடன் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் ரன்கள் பெரிய அளவில் பெற தவறினர் எனவே 20 ஓவர்கள் முடிவில் வெறும் 109 ரன்கள் மட்டுமே பதிவு செய்தனர்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து தனது 5 வது வெற்றியை பதிவு செய்தது, மும்பை அணி சார்பில் வெற்றிக்கு உதவும் வகையில் சிறப்பாக பவுலிங் செய்த வீராங்கனைகள் நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஹேலி மேத்யூஸ் தலா 3 விக்கெட்டுகளை பெற்றனர்.மேலும் மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது, மேலும் குஜராத் ஜெயின்ட்ஸ் அணி வெறும் ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.