ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி உடைய அதிரடி ஆட்டங்கள் ஒரு பார்வை…!! | ms dhoni top 5 ipl knocks

ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு பல தருணங்களில் வெற்றிகளை பெற்று தந்துள்ளார், அதில் சிறந்த அசத்தல் ஆட்டங்களை பற்றி காண்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடையாளமாகவும் கேப்டனாகவும் ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்தில் இருந்து செயல்பட்டு வரும் எம்.எஸ்.தோனி அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன வீரர் என்று கூறினால் மிகையில்லை. ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பினிஷர்களில் முக்கிய ஒருவராக எம்.எஸ்.தோனி என்றும் இடம் பெற்றிருப்பர் என்பதில் ஐயமில்லை.
1) தோனி பஞ்சாப் அணியை துவம்சம் செய்த போட்டி :
ஐபிஎல் 2010 ஆம் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் களமிறங்கிய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த போட்டியில் தோனி 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் உட்பட 54*(29) ரன்கள் பெற்று அசத்தினார்.
இந்த போட்டியில் குறிப்பாக கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்படும் போது இர்பான் பதான் பவுலிங்கில் முதல் நான்கு பந்துகளில் 4,2,6,6, ரன்கள் பெற்று சென்னை அணிக்கு அசத்தல் வெற்றியை பெற்று தந்தார். இன்று வரை பஞ்சாப் அணியால் மறக்க முடியாத நிகழ்வாக தோனி செய்த சிறப்பான சம்பவம் உள்ளது.
2) தோனி vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
ஐபிஎல் 2013 ஆம் ஆண்டு தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கடைசி ஓவரில் சிக்ஸர்கள் அடித்து அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி 67*(37) ரன்கள் பதிவு செய்தார், குறிப்பாக ஹைதராபாத் அணி பவுலர் ஆஷிஷ் ரெட்டி வீசிய இறுதி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பால் வைடு பால் ஆனது. அதன்பின் முதல் 3 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்து அணிக்கு தோனி வெற்றியை பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3) தோனி vs அக்சார் பட்டேல் :
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் சோகமான ஆண்டுகளாக 2016 மற்றும் 2017 அமைந்தது, இந்த ஆண்டுகளில் சென்னை அணி தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்தது.இதனால் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி விளையாடினார், இதில் ஐபிஎல் 2016 தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 23 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த தோனி இளம் பவுலர் அக்சார் பட்டேல் வீசிய ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
இந்த போட்டியில் தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 64*(32) ரன்கள் பெற்று அசத்தினார், கடைசி ஓவரில் மிரட்டல் வெற்றிகளை அணிக்கு பெற்று தருவதில் பேர் போனவர் தோனி என்பது இந்த போட்டியின் மூலம் அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்தது என்று கூறினால் மிகையில்லை.
4) பெங்களூரு அணியை பதம் பார்த்த தோனி :
ஐபிஎல் தொடரில் 2018 ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது, இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பெங்களூரு அணி அளித்த 205 ரன்கள் இலக்கை 19.4 ஓவர்களில் சென்னை அணி பெற்று மிரட்டல் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது தோனி உடைய சிறப்பான ஆட்டம் தான், சிக்ஸர்கள் மன்னன் என்ற பட்டத்திற்கு ஏற்றது போல் இந்த போட்டியில் 7 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியை பெற்று தந்த தோனி 70*(34) ரன்கள் பதிவு செய்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5) தோனியின் அதிரடி மிரட்டல் ஆட்டம் :
ஐபிஎல் தொடரில் பல மிரட்டல் ஆட்டங்கள் பதிவு செய்துள்ள எம்.எஸ்.தோனி உடைய அதிகபட்ச ரன் பதிவான போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் 2019 ஆம் ஆண்டு நடந்த போட்டி பதிவானது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 161 ரன்கள் பதிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் முன்னணி வீரர்கள் உடனுக்குடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், கடைசி நம்பிக்கையாக களமிறங்கிய தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த போட்டியில் 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் உட்பட 84*(48) ரன்கள் பதிவு செய்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த போதும் எதிர்பாராத விதமாக 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது, மேலும் ஐபிஎல் தொடரில் தோனி களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தும் சென்னை அணி தோல்வி அடைவது மிகவும் அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரின் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி என்றும் எப்போதும் மறக்க முடியாத முக்கிய இடத்தை பதிவு செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2023 ஆம் தொடர் எம்.எஸ்.தோனி உடைய கடைசி தொடராக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் சிறப்பான மிரட்டல் ஆட்டத்தை கடைசி முறையாக களத்தில் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.