என் வாழ்வின் பல நல்ல விஷயங்கள் சென்னையில்தான் நடந்திருக்கின்றன : தல தோனி நெகிழ்ச்சி

சென்னையில் நடைபெற்ற எல்ஜிஎம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தோனி, தன் வாழ்வின் பல நல்ல விஷயங்கள் சென்னையில்தான் நடந்திருக்கின்றன என்று கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, தனது சினிமா தயாரிப்பு நிறுவனமான ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ மூலமாக திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தமிழில் ‘எல்ஜிஎம்’ (Let’s Get Married) என்ற படத்தை தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இது இந்நிறுவனம் தயாரித்துள்ள முதல் திரைப்படம்.
ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா முதன்மைக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரமேஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். நடிகை நதியா, நடிகர் யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது. அதற்காக தோனியும், அவரது மனைவி சாக்ஷி தோனியும் சென்னைக்கு வந்தனர். அப்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுகூடி தோனிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனிடையே இன்று நடைபெற்ற எம்ஜிஎம் படத்தின் விழாவில் தோனி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், என்னுடைய டெஸ்ட் அறிமுகம் இங்கே சென்னையில்தான் நடந்தது. என்னுடைய அதிகபட்ச ஸ்கோரை இங்கே சென்னையில்தான் ஸ்கோர் செய்தேன். என் வாழ்வின் பல நல்ல விஷயங்கள் சென்னையில்தான் நடந்திருக்கின்றன.
எங்களுடைய முதல் தயாரிப்பாக 'LGM' படத்தை எடுத்திருக்கிறோம். ஒட்டுமொத்த குழுவும் ஒத்துழைத்ததால்தான் இந்தப் படத்தை மிகக்குறுகிய காலகட்டத்தில் எடுத்து முடிக்க முடிந்தது. இதில் பல சீனியர் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சில அறிமுகங்களும் இருக்கிறார்கள். உங்களுக்குப் படத்தைப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும். நதியா கண்ணாலயே நிறைய நடித்திருக்கிறார். நிறைய உணர்வுகளை அப்படியே தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான கதை. இரண்டு பெண்களுக்கு நடுவே ஹரீஷ் கல்யாண் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். சாண்ட்விச்சுக்கு நடுவே சிக்கியதை போலத்தான் இருந்தது ஹரீஷின் நிலைமை. LGM படம் குழந்தைகளுடன் சென்று பார்க்கக்கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். கல்யாணமானவர்களுக்கு வீட்டில் பாஸ் யார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" எனச் சொல்லிச் சிரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தீபக் சஹார் போதைப் பொருளைப் போன்றவர். அவர் அருகில் இல்லையென்றால் அவர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அதேநேரத்தில் உடனிருந்தால் ஏன் அருகில் இருக்கிறார் எனத் தோன்றும் என ஜாலியாகப் பேசி முடித்தார்.