சிஎஸ்கே அணிலாம் ஒரே அணியே இல்லை.. தோனி மட்டுமே காப்பாற்றி வருகிறார்: வாசிம் ஜாபர்

மும்பை: நட்சத்திர வீரர் தோனி விலகினால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு போராட வேண்டியிருக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை, குஜராத், ராஜஸ்தான் அணிகள் கோப்பைகளை வென்றிருந்தாலும், சென்னை அணியை போல் சீரான ஆட்டத்தை எந்த அணியும் வெளிப்படுத்தியதே இல்லை. அதற்கு சென்னை அணியின் கேப்டன் தோனி முக்கிய காரணமாக இருந்துள்ளார். ஒரே கேப்டனுக்கு கீழ் விளையாடுவதால் சென்னை அணியால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது.
வீரர்கள் மாறினாலும் சென்னை அணியின் நிரந்தர கேப்டனாக தோனியே செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் சிஎஸ்கே அணி குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், சென்னை அணியில் இருந்து கேப்டன் எம்எஸ் தோனியை நீக்கினால் கூட, அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாது.
தோனி இல்லையென்றால், சிஎஸ்கே வலியான அணியாக இருக்காது. இதுபோன்ற ஒரு அணியை வைத்து தோனியால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும். சென்னை அணியின் பவுலிங் இம்முறை அனுபவமற்றதாக இருந்தது. துஷார் தேஷ்பாண்டே இதுவரை ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதில்லை. பதிரானா, ஆகாஷ் சிங் உள்ளிட்டோர் சென்னை அணி புதிய வீரர்கள். தீபக் சஹரால் பாதி தொடரில் விளையாட முடியவில்லை.
மகீஷ் தீக்சனாவும் ஐபிஎல் தொடரில் அவ்வளவு பெரிய வீரராக உருவாகவில்லை. மொயின் அலி பெரும்பாலான போட்டியில் பந்துவீசவே அழைக்கப்படவில்லை. ஜடேஜாவும் அப்படிதான். இதுபோன்ற ஒரு பவுலிங் அட்டாகை வைத்து தோனியால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும். சிஎஸ்கே அணிக்கு தோனியால் மட்டுமே வெற்றி கிடைக்கிறது. தோனி வெளியேறிவிட்டால், சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு வருவதே கஷ்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.