ரஞ்சி கோப்பை 2022-2023 : அரையிறுதி போட்டியில் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசல்..! டெஸ்ட் தொடரில் வாய்ப்பு ..??

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகா மற்றும் சவுராஷ்டிரா அணிகள் மோதிய போட்டியில் கர்நாடக அணி வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார், குறிப்பாக 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் 249(429) ரன்கள் குவித்த நிலையில் சவுராஷ்டிரா வீரர் ஷெல்டன் ஜாக்சன் மூலம் ரன் அவுட் ஆனார்.
கர்நாடக அணிக்காக தனி ஒருவனாக போராடினர் கேப்டன் அகர்வால், எனவே முதல் இன்னிங்ஸ் முடிவில் 407 ரன்கள் பதிவானது. தனது திறமையான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு தனது திறனை நிரூபித்துள்ளார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்திய அணி விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கு இன்னும் அணி வீரர்கள் முடிவாகாத நிலையில் தனது அசத்தல் பேட்டிங்கை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள மயங்க அகர்வால் 4 சதம் மற்றும் 2 இரட்டை சதம் உட்பட 1488 ரன்கள் பதிவு செய்துள்ளார், மேலும் அவரது சராசரி 41.33 மற்றும் அதிகபட்ச ரன் 243 ஆகா பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.