லக்னோ அணிக்கு பயிற்சியாளராகும் ஆஸ்திரேலியாவின் கோபக்கார வீரர்... ஏற்கனவே கௌதம் கம்பீரும் இருப்பதால், இனி சூடு பிடிக்கப் போகுது ஆட்டம்

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய அணிகளாக குஜராத் டைட்டான்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் களமிறங்கின. இதில், கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 2022 மற்றும் 23 ஆகிய இரண்டு ஆண்டுகளில் விளையாடிய லக்னோ அணியும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது பாராட்டையும் பெற்றது.
இந்த அணியின் கேப்டனாக கே எல் ராகுலும், பயிற்சியாளராக ஆன்ட்டி ப்ளவரும், ஆலோசகராக கவுதம் கம்பீரும் செயல்பட்டு வந்தனர். காயம் காரணமாக கடந்த ஐபிஎல் தொடரில் பாதியிலேயே கே எல் ராகுல் வெளியேறினார். இதையடுத்து க்ருணால் பாண்டியா கேப்டன் பதவி வகித்தார். இந்த இலையில் அந்த அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு கோபமடையக்கூடிய லாங்கர், தற்போது லக்னோ அணிக்கு போய் சேர்ந்திருப்பது பேசி பொருளாகியுள்ளது. ஏற்கனவே அந்த அணியின் வழிகாட்டியாக இருக்கும் கௌதம் கம்பீர், களத்தில் மல்லு கட்ட கூடியவராக இருந்து வருகிறார். இதற்கு கடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தையே உதாரணமாக கூறலாம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிரிக்கெட் அரங்கில் இது பெரும் விவாதப்பொருளாக மாறிய நிலையில் இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இருவருக்கும் போட்டியின் ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதித்தது. மேலும் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் உடனான மோதல், இணையத்தில் பல ரசிகர்களாலும் விவாதிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில் ஜஸ்டின் லாங்கரும், கௌதம் கம்பீரும் ஒரே அணியில் பெரிய இடத்தில் இருக்கப் போவது, எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என ரசிகர்கள் இப்போதே கேள்வி எழுப்பி விடுகின்றனர். இதற்கான பதில் அடுத்த ஐபிஎல் தொடரில் தெரியவரும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.