ஆஷஸ் தொடருக்காக மல்லுக்கட்டும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தலைவர்கள்... இரு நாட்டு பிரதமர்களும் பண்ற வேலையாப்பா இது!... என முகம் சுளிக்கும் ரசிகர்கள்...

லண்டன் : ஆஷஸ் டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து பிரதமர் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகியோர் தங்கள் நாட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றிவசம் இங்கிலாந்திடம் இருக்க அதை தட்டிப் பறித்த ஆஸ்திரேலிய அணி, வாகை சூடியது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 416 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரன்களும் எடுத்தது.
அதேசமயம் முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆட்டம் இழந்த இங்கிலாந்து அணி, 91 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் வெற்றி இலக்கான 371 ரன்களை துரத்தி விளையாடியது. அந்த அணியின் பென்ஸ் ஸ்டோக்ஸ் மட்டும் 155 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடிய நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில்மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது, பந்து டெட் என எண்ணி லார்ட்ஸ் ஸ்ட்ரைக்கில் இருந்த இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ கிரீஸை விட்டு நகர்ந்து சென்றார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஸ்டம்புகளை தகர்த்தார். அதையடுத்து அவர் அவுட் என அறிவிக்கப்பட்டது. இது கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளானது. இந்நிலையில், இது தொடர்பாக ரிஷி சுனக் மற்றும் அந்தோணி அல்பனீஸ் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமரின் செய்தி தொடர்பாளர், ஆஸ்திரேலிய பாணியில் தங்கள் அணி ஆட்டத்தில் வெற்றி பெற விரும்பவில்லை என கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார். கேம் ஸ்பிரிட்டை ஆஸி. தகர்த்து விட்டதாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார். அதனை பிரதமர் ரிஷி சுனக் ஏற்கிறார். மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து எழுச்சி பெறும் என நம்புகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேசமயம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஆஸ்திரேலிய ஆடவர் மற்றும் மகளிர் அணியை எண்ணி பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் நாட்டுக்கு ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தந்திருப்பதாகவும், வெற்றியுடன் நாடு திரும்பும் அதனை வரவேற்க காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து வீரர் அவுட் செய்யப்பட்ட விதம் சர்ச்சையாகியுள்ள நிலையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய அணியை விமர்சித்துள்ளதும், மறுபக்கம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தங்கள் நாட்டு அணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதும் பேசு பொருளாகியுள்ளது.