கடைசி பந்தில் மாறிய ஆட்டம்.. கொல்கத்தா த்ரில் வெற்றி.. மாஸ் காட்டிய ரிங்கு சிங்.. | Kkr Vs Pbks IPL 2023 Highlights

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மே 08 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரின் 53வது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் கேப்டன் ஷிகர் தவா - பிரப்சிம்ரன்சிங் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய தவான் ரன்களை குவிக்க, மறுமுனையில் 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த பிரப்சிம்ரன்சிங் தனது விக்கெட்டை பறிக்கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த பனகா(0) ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
பின்னர், களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 21 ரன்களும், மறுமுனையில் சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஷிகர் தவான் 57(47) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த சாம் கரண் 4 ரன்னிலும், ரிஷி தவான் 19 ரன்னிலும் அவுட் ஆனார். கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய ஷாருக் கான் 21 ரன்களும், ஹர்பிரீத் பிரார் 17 ரன்களும் சேர்க்க, இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, ஜேசன் ராய் - குர்பாஸ் கூட்டணி நல்ல தொடக்கம் கொடுத்தது. ஜேசன் ராய் அதிரடியால் 4 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 36 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து நேதன் எல்லிஸ் வீசிய ஸ்லோயர் பந்தில் குர்பாஸ் 15 ரன்களில் ஆட்டமிழக்க, ஜேசன் ராய் மற்றும் நிதிஷ் ராணா கூட்டணி அதிரடிகாட்ட தொடங்கினர். இதையடுத்து, பவர் பிளே ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணியின் ஸ்கோர் 52ஆக உயர்ந்தது.
பின்னர், அதிரடியாக ரன் சேர்த்துக் கொண்டிருந்த ஜேசன் ராய் 38 (24) ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நிதிஷ் ராணா 37 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தநிலையில் 51 (38) ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். பின்னர், ரிங்கு சிங் - ரஸ்ஸல் கூட்டணி களத்தில் இருக்க, கடைசி 3 ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிபெற 36 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் வீசிய 18வது ஓவரில் 10 ரன்கள் எடுக்க, 19வது ஓவரை வீசிய சாம் கரண் பந்துவீச்சில் ரஸ்ஸல் மூன்று சிக்சர்களை விளாசி அசத்தினார்.
முடிவில் வெற்றிபெற 2 ரன்கள் தேவைப்பட்டநிலையில் ரஸ்ஸல் 42 (23) ரன்களில் ரன் அவுட் ஆனார். இறுதியில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 21 (10) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.