கே.எல்.ராகுலுக்கு கையில் காயம்.. தமிழக வீரர் அபிமன்யுவுவை களமிறக்க இந்திய அணி திட்டம்?

Representative Image. Representative Image.

By Sekar Published: December 21, 2022 & 17:20 [IST]

Share

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலின் வலது கையில் த்ரோ டவுனில் அடிபட்டதால் இந்திய அணியினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் நாளை இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக அபிமன்யு ஈஸ்வரன் களமிறங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

கே.எல்.ராகுல் கையில் காயம் பட்டவுடன், பேட்டை விட்டுவிட்டு பலமாக கையை குலுக்கிக் கொண்டு வலியில் நெளிந்தார். இதையடுத்து அவருக்கு இந்திய மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

ஆனால் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், தனது போட்டிக்கு முந்தைய ஊடக சந்திப்பில், இது  ஒன்றும் தீவிரமான காயம் இல்லை என்பதால் பயப்பட ஏதுமில்லை என்று கூறினார்.

“தீவிரமாகத் தெரியவில்லை. அவர் நலமாக இருப்பதாக தெரிகிறது. அவர் நலமாக இருப்பார் என நம்புகிறோம். டாக்டர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

அதே சமயம் தேவைப்பட்டால், ரிசர்வ் தொடக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரனை இந்தியா களமிறக்கவும் தயாராகி வருவதாகத் தெரிகிறது. உண்மையில், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அபிமன்யு ஈஸ்வரன் ராகுல் டிராவிட் மற்றும் பராஸ் மாம்ப்ரே ஆகிய இருவரின் கண்காணிப்பின் கீழ், இன்று நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது இந்த ஊகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.