IND VS AUS ODI 2023 : கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா அதிரடியில் இந்திய அணி அசத்தல் வெற்றி..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் முன்னணி வீரர் கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர், குறிப்பாக கே.எல்.ராகுல் இந்திய அணியின் காப்பானாக செயல்பட்டு முதல் வெற்றியை பெற்று தந்து தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து அசத்தியுள்ளார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் இந்திய அணியின் பவுலர்கள் வேகத்தில் திணறி உடனுக்குடன் பெவிலியன் திரும்பினார்கள். இந்திய அணியின் பவுலர்கள் அதிரடியில் ஆஸ்திரேலியா அணி 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே பதிவு செய்தது.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த ஷமி மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை பெற்றனர், ஆஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 81(65) ரன்கள் பதிவு செய்தார். அதன்பின் 189 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து பவுலர் மிட்செல் ஸ்டார்க் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து பெவிலியன் திருப்பினார்.
இந்திய அணியின் நிலையை சரி செய்யும் வகையில் களத்தில் இறங்கி பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவிக்க தொடங்கினார் அணியின் அனுபவ வீரர் கே.எல்.ராகுல், அவருடன் ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 25(31) ரன்கள் பெற்று நன்றாக செட்டில் ஆன நிலையில் தனது விக்கெட்டை ஆஸ்திரேலியா வீரர் ஸ்டோனிஸ் இடம் பறிகொடுத்தார்.
இந்திய அணியின் வெற்றிக்காக போராடி வந்த கே.எல்.ராகுலுக்கு உதவும் வகையில் களமிறங்கிய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா அணியின் பவுலர்களை சிதறடித்து அருமையான ஆட்டத்தை ராகுல் மற்றும் ஜடேஜா கூட்டணி வெளிப்படுத்தியது. இந்நிலையில் இந்திய அணி 39.5 ஓவர்களில் 191 ரன்கள் பெற்று ஒருநாள் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
ஆஸ்திரேலியா பவுலர்களை திணறடித்து அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 75*(91) மற்றும் ஜடேஜா 45*(69) ரன்களுடன் களத்தில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் பேட்டிங்கில் 45 ரன்கள் மற்றும் பவுலிங்கில் 2 விக்கெட்டுகளை பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது, மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு பதில் முதல் ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட முன்னணி வீரர் மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா எதிர்காலத்தில் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக திகழ்வார் என்பதை மீண்டும் சிறப்பான கேப்டன்சி மூலம் நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது