இந்திய டி20 அணியில் இந்த முறையும் இடமில்லை... மனம் நொந்து போய் ட்விட் செய்த கொல்கத்தா அணியின் கேப்டன்... ஆறுதல் கூறும் ரசிகர்கள்...

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 போட்டியில் இடம்பெறாதது குறித்து கிரிக்கெட் வீரர் நிதீஸ் ராணா, மறைமுகமாக ட்விட்டரில் பதிவிட்டு இருப்பது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டி20 அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக சூரிய குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முழுக்க முழுக்க இளம் வீரர்களைக் கொண்டு களமிறங்கும் இந்த அணியில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சஞ்சு சாம்சனும் அணியில் இடம் பெற்றுள்ளார். 15 பேர் கொண்ட இந்திய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில் சாஹல், அக்சர் படேல், குல்தீப், ரவி பிஷ்னாய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோரும் அணியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பலருக்கும், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங், அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட நிதிஷ் ராணா, பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பராக அறியப்படும் ஜித்தேஷ் சர்மா என பலரது பெயர்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
கடைசியாக 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச போட்டியில் விளையாடிய நிதிஷ் ராணா, அதன் பிறகு இந்திய அணியின் ஜெர்சியை ஒருமுறை கூட அணியவே இல்லை. கொல்கத்தா அணிக்காக அவ்வபோது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், அவர் அணியில் இல்லாதது குறித்து கிரிக்கெட் விமர்சனகள் மத்தியில் கேள்வி எழ ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இல்லாததால் வருந்தியுள்ள நிதிஷ் ராணா, அது குறித்து ட்விட்டரில் மறைமுகமான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வாழ்க்கையில் மோசமான நாட்கள் தான் சிறப்பான ஒன்றை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். நிச்சயம் அவர் பிசிசிஐ யின் தேர்வு முறையை குறித்து தான் விமர்சித்து இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இது இப்படி இருக்க, அடுத்து வரும் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் நிச்சயம் ருதுராஜ் கெய்க்வாட், ஜித்தேஷ் சர்மா உள்ளிட்டோர் அணியில் இடம் பெறுவார்கள் என்று பிசிசிஐக்கு நெருக்கமான சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.