கொல்கத்தா அணி வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிதறியது…!! | kkr Rahmanullah Gurbaz smashed gt bowlers 2023

ஐபிஎல் 2023 அரங்கில் இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டியில், முதல் இன்னிங்ஸில் கொல்கத்தா அணி இளம் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணி பவுலர்களை சிதறடித்து அரங்கை அதிர வைத்தார்.
இந்த போட்டி நடைபெற இருந்த ஈடன் கார்டன் மைதானத்தில் வானிலை மோசமாக இருந்த நிலையில் மிகவும் தாமதமாக போட்டி தொடங்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி துவக்க வீரர் என் ஜெகதீசன் 19(15) சிறப்பாக ஆட்டத்தை தொடங்கி குஜராத் டைட்டன்ஸ் அணி அனுபவ பவுலர் முஹம்மது ஷமி இடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை ஒரு புறம் வெளிப்படுத்த, அதே சமயத்தில் கொல்கத்தா அணியின் மற்றொரு வீரர் ஷர்துல் தாக்கூர் 0(4) உடைய விக்கெட்டை முஹம்மது ஷமி கைப்பற்றினார். கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்தாலும் குர்பாஸ் அதிரடியில் 6 ஓவர் (பவர் பிளே) முடிவில் 61 ரன்கள் பதிவு செய்தது.
கொல்கத்தா அணி சார்பில் சிறப்பாக விளையாடி வந்த இளம் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 27 பந்துகளில் அரைசதம் பதிவு செய்து அசத்தினார். அதன்பின் குஜராத் அணி பவுலர்கள் சற்று கொல்கத்தா அணியின் வீரர்கள் ரன் பெறுவதை கட்டுப்படுத்திய நிலையில் 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 84 ரன்கள் பதிவு செய்திருந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த இடது கை வேகப்பந்து பவுலர் ஜோசுவா லிட்டில் ஒரே ஓவரில் கொல்கத்தா அணியின் முன்னணி வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 11(14) மற்றும் நிதிஷ் ராணா 4(3) உடைய விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு உதவினார்.
குஜராத் அணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கொல்கத்தா அணி வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் உட்பட 39 பந்துகளில் 81 ரன்கள் பெற்று அசத்தல் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஐபிஎல் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் குஜராத் அணி பவுலர் நூர் அகமது பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மிரட்டல் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் 34 (19) சற்று அதிரடியை வெளிப்படுத்திய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 179 ரன்கள் பதிவு செய்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா அணி அளித்த இலக்கை அடைய முடியுமா ..?? என்பதை பொறுத்திருந்து காண்போம்.