ENG VS NZ TEST 2023 : சர்வதேச டெஸ்ட் அரங்கில் கேன் வில்லியம்சன் சாதனை..!! ரசிகர்கள் பாராட்டு.!!

நியூசிலாந்து மண்ணில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், 2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் கேன் வில்லியம்சன் புதிய மைல்கல்லை அடைந்து சாதனை படைத்தார்.
இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நியூசிலாந்து அணி கட்டாயம் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் களமிறங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 435 ரன்கள் பெற்று அசத்தியது, இதை அடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு பாலோ ஆன் வழங்கப்பட்ட நிலையில், தனது அணியின் நிலையை சரி செய்யும் வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் விளையாடிய போது வில்லியம்சன் டெஸ்ட் அரங்கில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் பெற்ற வீரர் என்ற சாதனையை பதிவு செய்தார்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் பெற்ற முன்னாள் வீரர் ரோஸ் டெய்லர் உடைய சாதனையை முறியடித்து கேன் வில்லியம்சன் அசத்தினார், அதாவது நியூஸிலாந்து அணிக்கு 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் ரோஸ் டெய்லர் 7683 ரன்கள் பெற்றிருந்தது தான் நியூசிலாந்து அணி சார்பில் ஒரு பிளேயர் பெற்ற அதிகப்படியான டெஸ்ட் ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்த சாதனையை முறியடித்து அசத்தினார். இந்த போட்டியில் வில்லியம்சன் 132(282) ரன்கள் பெற்று தனது விக்கெட்டை இழந்த நிலையில் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் அரங்கில் 92 போட்டிகளில் விளையாடிய வில்லியம்சன் 26 சதம் மற்றும் 5 இரட்டை சதம் உட்பட 7787 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து அணிக்கு கேப்டனாக பல போட்டிகளில் வெற்றிகள் பெற்று தந்து அசத்திய முன்னாள் டெஸ்ட் கேப்டன் கேன் வில்லியம்சன் உடைய இந்த புதிய சாதனைக்கு முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை இணையத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.