ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்பு..?? காயத்தால் தொடரும் சோகம்..!!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து பவுலராக விளங்கிய ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில், எப்போது பும்ரா இந்திய அணியில் மீண்டும் இணைவார் என்று கிரிக்கெட் நிபுணர்கள், இந்திய ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் மிகவும் எதிர்பார்த்த நிலையில் பும்ரா இன்னும் பல மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ மற்றும் ஐபிஎல் வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவலின் படி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் காயம் முழுமையாக குணமாக இன்னும் 5 மாதங்களுக்கு மேல் ஆகும் என்று தெரிகிறது, இந்நிலையில் அடுத்து நடைபெற பெற உள்ள ஐபிஎல் தொடர் மற்றும் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆகிய இரண்டிலும் ஜஸ்பிரீத் பும்ரா கலந்து கொள்ள மாட்டார் என்று எதிர்பார்க்க படுகிறது.
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து வெளிவந்த செய்தியின்படி இந்திய கிரிக்கெட் அணி பும்ராவிற்கு தேவையான ஓய்வு அளித்து, காயத்தில் இருந்து முழுமையாக மீள வைத்து இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒரு நாள் உலக கோப்பை தொடரில் பங்கேற்க வைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது, இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி பவுலர் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்பார் என்று முன்னதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தொடருக்கான அணியிலும் பும்ரா இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,
இந்நிலையில் அண்மையில் வந்த தகவலின் படி பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குணமாக இன்னும் 5 மாதங்கள் ஆகலாம் என்பதால், பும்ரா வரவிற்கும் தொடர்களில் பங்கேற்க நேஷனல் கிரிக்கெட் அகாடமி சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்திய அணிக்காக கடைசியாக பும்ரா செப்டம்பர் 25, 2022 ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படும் இந்த தகவல் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஜஸ்பிரீத் பும்ரா உடைய ஐபிஎல் தொடர் பங்கேற்பு மற்றும் காயம் குறித்து முழுமையான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.