தோனிக்கு பிறகு.. சென்னை சூப்பர் கிங்ஸின் எதிர்கால திட்டம் என்ன..?

Representative Image. Representative Image.

By Sekar Published: December 22, 2022 & 17:48 [IST]

Share

நான்கு முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், நாளை நடக்கும் மினி ஏலத்தில் தோனியின் வாரிசுக்கான வேட்டையில் ஈடுபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

2022 சீசனில் ரவீந்திர ஜடேஜா கடைசி நேரத்தில் போட்டித் தொடர் தொடங்கும் சில தினங்களுக்கு முன்பு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் தலைமையில் தொடர்ந்து சொதப்பியதால், சீசனின் நடுப்பகுதியில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

இந்நிலையில், தோனி 2023 சீசனுடன் ஐபிஎல்லில் இருந்து விடை பெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மூத்த வீரர்களான டுவைன் பிராவோ மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரும் ஐபிஎல்லில் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டனர். 

இதனால் எதிர்காலத்தில் அணியை வழிநடத்த சிஎஸ்கே சில அனுபவ வீரர்களை அணியில் சேர்க்க விரும்புகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பர்ஸில் 20.45 கோடி ரூபாய் மீதமுள்ளதோடு, 7 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 2 வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கேப்டன்சிக்கு முக்கியத்துவம்

இதைக் கருத்தில் கொண்டு, தலைமைப் பண்புகளைக் கொண்ட குறைந்தது இரண்டு அனுபவம் வாய்ந்த வீரர்களை, அதில் ஒரு இந்திய மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர்களை வாங்க சென்னை அணி திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்காக ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோரை சிஎஸ்கே குறிவைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீசன் முழுவதும் இந்திய வீரர்கள் இருப்பார்கள் என்பதால் சென்னை சூப்பர் கிங்சின் முதல் சாய்சாக பாண்டே இருக்கிறார். மேலும், பாண்டே இந்திய அணியின் பகுதியாக இல்லை என்பதால், அவரை எடுப்பதில் சென்னை அணி தடுமாற்றத்தில் உள்ளது.

அதே சமயத்தில் ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரை பொறுத்தவரை, இரண்டு காரணங்களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. முதல்வாத காரணம் நியூசிலாந்தின் மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருக்கும் வில்லியம்சன், ஐபிஎல் தொடரின்போது நடக்கும் நியூசிலாந்தின் இலங்கைக்கு எதிரான உள்நாட்டுத் தொடர் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வெளிநாட்டுத் தொடர்களில் விளையாட செல்லவேண்டி இருக்கும்.

ஆனால், மார்ச் மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ள இங்கிலாந்தின் டி20 அணியில் ஜோ ரூட் இல்லை. பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளிலும் விளையாடும். ஆனால் ஜோ ரூட்டிற்கு இனி அந்த அணியிலும் நிரந்தர இடம் இல்லை.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் முதன்மையான முன்னுரிமையாக ஜோ ரூட்டை வைத்துள்ளது.

இதர வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு வலுவான அணியைக் கொண்டிருந்தாலும், நீண்ட இன்னிங்ஸ்களை விளையாட விரும்பும் டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்குத் துணையாக ஃபயர்பவரைச் சேர்க்க வேண்டும். உத்தப்பா ஓய்வு பெற்றதால், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முன்னுரிமைகளில் ஒரு தொடக்க வீரரை உருவாக்குவதையும் ஒன்றாக வைத்துள்ளது.

இந்த விஷயத்திற்காக, ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், இங்கிலாந்தின் ஹாரி புரூக் மற்றும் மேற்கு இந்திய வீரர் நிக்கோலஸ் பூரன் ஆகியோரிடம் கவனத்தை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான டுவைன் பிராவோ ஓய்வை அறிவித்துவிட்டதால், தற்போது ஒரு உண்மையான ஆல்-ரவுண்டருக்கான தேவையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் உள்ளது. அந்த இடத்தை நிரப்ப, சாம் கர்ரனை விட சிறந்தவர் யாரும் இல்லை என்பதால், அவரை எப்படியும் வளைத்துவிட வேண்டும் என சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய பந்தை ஸ்விங் செய்து, டெத் ஓவர்களில் பந்து வீசக்கூடிய ஒரு பந்து வீச்சாளர் மற்றும் அணிக்காக சிறப்பாக பேட்டிங்கும் செய்யக் கூடிய சாம் கர்ரன் ஏற்கனவே சென்னை அணியில் விளையாடிய அனுபவம் உண்டு என்பதால், அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது சென்னை சூப்பர் கிங்சுக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

இருப்பினும், சமீபத்தில் இங்கிலாந்தின் T20 உலகக் கோப்பை வெற்றியில் போட்டியின் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாம் கர்ரனுக்கு மற்ற அணிகளும் போட்டி போடும் என்பதால், அதிக தொகையை சாம் கர்ரனுக்காக செலவிட வேண்டியிருக்கும். இது மற்ற வீரர்களை எடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், சிஎஸ்கே அதை எப்படி சமாளிக்க போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உள்ளூர் திறமைக்கு முக்கியத்துவம்

விக்கெட் கீப்பர் நாராயண் ஜெகதீசன் தமிழ்நாட்டிற்காக சமீபத்திய விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஒரு இரட்டை சதம் உள்ளிட்ட ஐந்து சதங்களை அடித்து அசர வைத்தார். இரட்டை சதமடித்த போட்டியில் 277 ரன்களை எடுத்த நிலையில், அது லிஸ்ட் ஏ வரலாற்றில் அதிக தனிநபர் ஸ்கோராக பதிவாகியுள்ளது. 

அதே சமயம் இதற்கு முன்பு சில போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ள நிலையில், அதில் கவனம் ஈர்க்கும் வகையில் செயல்படாததால் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவரது பார்ம் மற்றும் குறிப்பாக அவர் ஒரு விக்கெட் கீப்பர் என்பதைக் கருத்தில் கொண்டு சிஎஸ்கே அவரை மீண்டும் வாங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மற்றொரு முன்னாள் சிஎஸ்கே-ஐயன் பாபா அபராஜித் அணிக்கு ஒரு சிறந்த மிடில்-ஆர்டர் விருப்பமாக இருக்கிறார், ஏனெனில் அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர் மற்றும் அவரது சொந்த ஆஃப்-ஸ்பின் மூலம் பங்களிக்க முடியும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட அபராஜித்தின் இரட்டை சகோதரர் பாபா இந்திரஜித்தும், சென்னை அணியால் மற்றொரு விக்கெட் கீப்பிங் விருப்பமாக உள்ளது.

2021 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்த சித்தார்த் மற்றும் கடந்த சீசனில் மும்பை இந்தியனால் வெளியிடப்பட்ட சஞ்சய் யாதவ் ஆகியோர் சிஎஸ்கேயில் பேக் அப் வீரர்களாக இணைய வாய்ப்புள்ளது.

தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், ராஜ்கர் சிங், ராஜ்கர் சிங், மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி, துஷார் தேஷ்பாண்டே.