ஐபிஎல் தொடரில் பதிவான முறியடிக்க முடியாத சாதனைகள் ஒரு பார்வை…!! | ipl unbreakable records

உலக அளவில் புகழ் பெற்ற இந்தியாவின் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடர் தனது 16 வது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளது, இந்த 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ளது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.இதற்கு முன் ஐபிஎல் தொடரில் பதிவான முக்கிய சாதனைகளை பற்றி காண்போம்.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தொடரில் உள்ள 10 அணிகளும் தங்கள் ஹோம் கிரௌண்டில் போட்டிகளில் விளையாட உள்ளார்கள். இதனால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்த தொடரில் இடம்பெற்றுள்ள முக்கிய முன்னணி வீரர்கள் தான் காரணம் என்று கூறினால் மிகையில்லை. அந்த அளவிற்கு ஐபிஎல் தொடரில் இடம்பெற்ற வீரர்கள் தங்கள் அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் ஐபிஎல் தொடரை எடுத்த சென்று பெருமைப்படுத்தி உள்ளார்கள்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பதிவான முறியடிப்பதற்கு மிகவும் கடினமான முக்கிய சாதனைகள் ஒரு பார்வை :
ஒரு அணியின் இமாலய ஸ்கோர் சாதனை :
ஐபிஎல் தொடரில் மிகவும் முக்கிய அதிரடி அணியாக திகழும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது, அதாவது 2013 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 263-5 ரன்கள் பதிவு செய்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஸ்கோர் தான் இன்று வரை ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையாக பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை எந்த ஒரு அணியும் எளிதாக முறியடித்து விட முடியாது, வரும் ஐபிஎல் 2023 தொடரில் இந்த சாதனை முறியடிக்க படுமா..! என்று பொறுத்திருந்து காண்போம்.
தனிப்பட்ட நபரின் ஸ்கோர் சாதனை :
ஐபிஎல் தொடரில் மட்டும் அதிரடி பேட்ஸ்மேனாக விளங்காமல் சர்வதேச தொடர்களிலும் அதிரடியை வெளிப்படுத்தி ‘யூனிவேர்சல் பாஸ்’ என்ற பட்டம் பெற்ற கிறிஸ் கெயில் தான் இந்த மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 263 ரன்கள் பதிவு செய்த போட்டியில் தனி ஒருவனாக எதிரணியினரை சிதறடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்சர்கள் உட்பட 175*(66) ரன்கள் பதிவு செய்து கிறிஸ் கெயில் அசத்தினார். இன்று வரை ஐபிஎல் தொடரில் ஒரு தனிநபரின் அதிகபட்ச ஸ்கோர் கிறிஸ் கெயில் உடைய 175 ரன்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் இருந்து 2021 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் ஓய்வு பெற்றிருந்தாலும் அவரது சாதனை மற்றும் மிரட்டல் ஆட்டம் என்றும் ஐபிஎல் வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு அணியின் தனிப்பட்ட மோசமான சாதனை :
ஐபிஎல் தொடரில் அதிகப்படியான மிரட்டல் சாதனைகளை படைத்த பெருமைக்குரிய அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான், அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் மிகவும் மோசமான சாதனை ஒன்று இடம்பெற்றுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது, இது தான் இன்று வரை ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் மிக குறைந்த ஸ்கோர் என்ற சாதனையை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடும் எந்த அணியும் முறியடிக்க கூடாது என்று நினைக்கும் மோசமான சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தொடரில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் :
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி அதிரடி பேட்ஸ்மேன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான், ரன் மெஷின் என்று அழைக்க படும் கோலி 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் விராட் கோலி 4 சதம் உட்பட 973 ரன்கள் பதிவு செய்து அசத்தினார், இன்று வரை எந்த ஒரு பேட்ஸ்மேனும் முறியடிக்க முடியாத பெரும் சாதனையாக ஐபிஎல் வரலாற்றில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹட்ரிக் சாதனை :
ஐபிஎல் தொடரில் முன்னணி மூத்த வீரராக விளங்கும் அமித் மிஸ்ரா தனது சிறப்பான பவுலிங்கில் மூலம் தொடரில் மூன்று முறை ஹாட்ரிக் பெற்று சாதனை படைத்துள்ளார், அதாவது 2008, 2011, 2013 ஆகிய மூன்று வருடங்களில் பவுலிங்கில் ஹாட்ரிக் விக்கெட் பெற்று அசத்தியுள்ளார்.
இவரை அடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங் 2 முறை ஹாட்ரிக் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அமித் மிஸ்ரா லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த பவுலிங் சாதனை :
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அல்சாரி ஜோசப் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி மகத்தான சாதனை ஒன்றை படைத்தார், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய அல்சாரி ஜோசப் 3.4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் வழங்கி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி ஐபிஎல் தொடரில் சிறந்த பவுலிங் ரெகார்டை பதிவு செய்தார்.