ஐபிஎல் 2023 தொடரில் ஏற்பட உள்ள முக்கிய மாற்றங்கள்…!! பிசிசிஐ அறிவிப்பு..!!

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளது, இந்த புதிய நடைமுறைகள் ஐபிஎல் 2023 தொடரில் இருந்து அறிமுகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் ரசிகர்கள் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள், இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரை இன்னும் ஆர்வமாக மாற்றும் வகையில் முக்கிய விதி மாற்றங்களை பிசிசிஐ நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக டாஸ் போட்ட பிறகு ப்ளேயிங் லெவனில் மாற்றம் செய்யும் புதிய முறை அறிமுகமாக உள்ளது. அதாவது போட்டியில் டாஸ் போடும் முன் இரு அணிகளும் ஒரு ப்ளேயிங் லெவனை அறிவித்த பிறகு, டாஸ் முடிவான பிறகு பேட்டிங் மற்றும் பவுலிங் பொறுத்து தங்கள் அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் சிறந்த பிளையிங் லெவனை தேர்வு செய்வார்கள், எனவே போட்டியின் சுவாரசியம் மிகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த முறை முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா உள்நாட்டு டி20 லீக் தொடரில் அறிமுகமான நிலையில் தற்போது ஐபிஎல் தொடரிலும் அறிமுகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐபிஎல் தொடரில் அடுத்து புதிய மாற்றங்கள் வரிசையில் பெனாலிட்டி முறை அறிமுகமாக உள்ளது, குறித்த நேரத்தில் ஓவர்கள் வீச தவறினால் 30 யார்டு வட்டத்திற்குள் வெறும் 4 பிளேயர்கள் மட்டும் நிற்கும் பெனாலிட்டி வழங்கப்படும். அதேபோல் பந்து வீசும் ஒரு அணியின் பிளேயர்கள் மற்றும் விக்கெட் கீப்பர் போட்டியின் போது தவறான அல்லது தகாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அபராதமாக 5 ரன்கள் எதிரணிக்கு வழங்கப்படும் மேலும் இந்த பந்து ரத்தானது (டெட் பால் ) என்று அறிவிக்கப்படும்.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் ஏற்கனவே இம்பாக்ட் பிளேயர் என்ற புதிய முறையை பிசிசிஐ நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ள நிலையில், தற்போது இந்த கூடுதல் புதிய நடைமுறைகள் மூலம் தொடரின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 2023 ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.