அரை சதம் அடித்த சாம் குர்ரான்.. பவுலிங்கில் சொதப்பிய மும்பை அணிக்கு டார்கெட் இதுதான்.. | IPL 2023 MI vs PBKS 1st Innings Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 31 வது லீக் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை, சாம் குர்ரான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பஞ்சாப் அணி சார்பில் பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பின்னர், மும்பை அணி தரப்பில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் ஓவரை வீசினார்.
பிறகு நிதானமாக ஆடி வந்த பஞ்சாப் அணியின் மேத்யூ ஷார்ட் மும்பை அணியின் கேமரூன் கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங் உடன் சேர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதில், பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 58 ரன்கள் சேர்த்தது. பின்னர், சிறப்பாக ஆடிய பிரப்சிம்ரன் 26 (17) ரன்களில் அர்ஜுன் தெண்டுல்கர் பந்து வீச்சில் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து விளையாட வந்த லியாம் லிவிங்ஸ்டன் 10(12) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த அதர்வா டைடே 29(17) ரன்களில் பியூஷ் சாவ்லா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர், 10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்தது. பின்னர் வந்த ஹர்பிரீத் பாட்டியா - சாம் குர்ரான் 55(29) கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் எகிறியது. இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை அணிக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.