வெங்கடேஷ் ஐயரின் மிரட்டல் பேட்டிங்.. மும்பை வெற்றிக்கு டார்கெட் இதுதான்.. | MI vs KKR 1st Innings Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 22வது லீக் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, குர்பாஸ், ஜெகதீசன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பின்னர், மும்பை அணி தரப்பில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் ஓவரை வீச, தமிழக வீரர் ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்.
இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. அதன்பின்னர், பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் தொடக்க வீரர் குர்பாஸ், 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து, நிதிஷ் ராணா 5(10) களமிறங்கினார். ஷோக்கின் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயன்றபோது இவரும் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஷர்துல் தாகூர் 13 ரன்னில் ஆட்டமிழக்க, இதனால் கொல்கத்தா அணி தடுமாற தொடங்கியது.
உடனே பவர் பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட வெங்கடேஷ் ஐயர், அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டர்களை அடித்து தள்ளினார். தனி ஆளாக நிலைத்து நின்று ஆடி சதமடித்த வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 9 சிக்சரும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் மெக்கல்லத்திற்கு பின் சதம் விளாசிய இரண்டாவது கொல்கத்தா வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அதன்பின், 19 ஓவர்கள் முடிவில் 175 ரன்களை கொல்கத்தா அணி எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 10 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதையடுத்து கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை அணிக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.