ஐ.பி.எல் 2023: இந்த 5 பேரை எப்படியாவது தூக்கிடனும்..! சிஎஸ்கே பக்கா ஸ்கெட்ச்..!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 21, 2022 & 16:32 [IST]

Share

IPL 2023 : ஐ.பி.எல் தொடரில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் 4-முறை சாம்பியன் பட்டங்களை வென்று முக்கிய அணி என்ற பெருமையுடன் விளங்குவது  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். மேலும் கடந்த 2021-ஆம் ஆண்டு ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக வென்று அசத்தியது.  

இந்நிலையில் வரும் 2023-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்கும் முன்னர் அணியிலிருந்து பல முன்னனி வீரர்களை விடுவித்தார்கள். 

சென்னை அணியில் தற்போது உள்ள வீரர்கள் அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெரும் நிலையில் இருப்பதால் அதற்கு முன்னர் அனுபவ வீரர்களின் மேற்பார்வையில்  ஒரு புதிய இளம் வீரர்கள் கொண்ட அணியைக் கட்டமைக்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இந்த மாற்றம் அமைந்துள்ளதாக தெரிகிறது.

சென்னை அணி வரும் ஐ.பி.எல் ஏலத்தில் தங்கள் அணியில் உள்ள தேவையான இடங்களை நிரப்ப இந்த வருடம் முழுவதும் பல தொடர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்த 5 முக்கிய வீரர்களைக் குறிவைத்து  வாங்க முற்படுவார்கள் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

1. சாம் கர்ரன்

இங்கிலாந்து அணியின் இளம் இடதுகை பௌலிங் ஆல்ரவுண்டராக கலக்கி வரும் சாம் கர்ரனை இந்த ஏலத்தில் கண்டிப்பாகச் சென்னை அணி போட்டி போட்டு வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம் கர்ரன் இந்த வருடம் முழுவதும் நடந்த டி-20 போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அண்மையில் நடந்து  முடிந்த டி-20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த சாம் கர்ரன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தொடர் நாயகன்  விருதையும் வென்றார். இந்த உலகக்கோப்பையில் தொடரில் சாம் கர்ரன் விளையாடிய 6 போட்டிகளில் 6.52 எகானமி உடன் 13-விக்கெட்களை சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாம் கர்ரன் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் நடந்த ஐ.பி.எல் தொடர்களில் சென்னை அணியில் விளையாடிப் பல போட்டிகளில் வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளார். இந்த ஆண்டு சாம் கர்ரனின் மிரட்டலான ஆட்டத்தினால் சென்னை அணி மட்டுமில்லாமல் அனைத்து அணிகளும்  நடக்கவிருக்கும் ஏலத்தில் இவருக்காகப் போட்டிப் போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2.நாராயண் ஜெகதீசன்

இந்த ஏலத்திற்கு முன்பாக சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர் தான் நாராயண் ஜெகதீசன். இவர் தற்போது இந்தியாவின் உள்நாட்டுத் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் பல தனிநபர் ரெகார்ட்களையும் படைத்தார். 

ஜெகதீசன் தான் விளையாடிய 8-போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 830 ரன்களை அடித்தார். முடிவில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 125.37 ஆகப் பதிவானது .

ஜெகதீசன் கடந்த சில ஆண்டுகளாகச் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த போதிலும்,அணியில் முன்னனி வீரர்கள் இருந்ததால் இரண்டு போட்டிகளில் மட்டுமே மொத்தமாக இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால் அணியிலிருந்து இந்த தொடருக்கு முன்னர் விடுவிக்கப்பட்டார்.

அதன்பின் நடந்த உள்நாட்டுப் போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இவரை மீண்டும் ஏலத்தில் எடுக்க அணி நிர்வாகம் முற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3.ஹாரி புரூக்

இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி புரூக் இந்த ஆண்டு தான் விளையாடிய அனைத்து தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய 7-டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் மிரட்டலாக விளையாடிய ஹாரி புரூக் 238 ரன்களை அடித்து 163.01 ஸ்ட்ரைக் ரேட் உடன் முடித்தார்.

அதன்பின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி விளையாடிய டெஸ்ட் போட்டியில் மூன்று போட்டிகளில் களமிறங்கிய ஹாரி புரூக் மொத்தமாக 468 ரன்களை அடித்தார். அதில் 3-சதமும் ஒரு அரைசதமும் அடங்கும். இந்த ஆண்டு இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக்கை போட்டி போட்டாவது ஏலத்தில் கண்டிப்பாகச் சென்னை அணி வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4.ஜேசன் ஹோல்டர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து அசத்தல் ஆல்ரவுண்டர் பிராவோ விடுவிக்கப்பட்டு அணியின் பௌலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை நிரப்ப ஏலத்தில் ஒரு ஆல்ரவுண்டரை வாங்க அணி நிர்வாகம் முடிவாக உள்ளது. 

இந்நிலையில் கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக வாங்கப்பட்ட ஜேசன் ஹோல்டர் சிறப்பான பங்களிப்பை அளித்தார், தான் விளையாடிய 12-போட்டிகளில் 14-விக்கெட்களை கைப்பற்றினார் பேட்ஸ்மேனாகவும் முக்கிய தருணங்களில் அசத்தினார்.மேலும் 2021-ஆம் ஆண்டு வெறும் 8-போட்டிகளில் 16 விக்கெட்களை ஹைதெராபாத் அணியில் விளையாடிய பொழுது கைப்பற்றி அசத்தினார். 

இந்த முறை ஹோல்டர் லக்னோ அணியால் விடுவிக்கப்பட்ட நிலையில், இவரை ஏலத்தில் வாங்கச் சென்னை அணி கண்டிப்பாக முயல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேசன் ஹோல்டர் இந்த ஏலத்தில் தனது அடிப்படை விலையாக 2-கோடி ரூபாயை  நியமித்துள்ளார்.

5.ஜெரால்ட் கோட்ஸி

தென் ஆப்பிரிக்காவைச் சேர்த்த இளம் வீரரான ஜெரால்ட் கோட்ஸி கடந்த இரு ஐ.பி.எல் தொடர்களில் எந்த அணியாலும் வாங்கப்படாத நிலையில், இந்தமுறை ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.

கடைசி சில மாதங்களில் இவர் விளையாடிய உள்நாட்டுத் தொடர்களில் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்காவின் 16-நபர்களை கொண்ட டெஸ்ட்  அணியில் இடம் பெற்றார். இவரது தற்போதைய சிறப்பாக ஆட்டங்களைப் பார்த்த சென்னை அணி வரும் ஏலத்தில் தங்கள் அணியின் ஆல்ரவுண்டர் இடத்திற்காக வாங்குவார்கள் என்று தெரியவருகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 2023 ஐ.பி.எல் தொடரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தவும்  வரும் காலத்தில் அசத்தலான  அணியாகச் சென்னை அணி திகழும் வகையில் இளம் வீரர்கள் கொண்ட ஒரு படையை  உருவாக்க முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.