ஐபிஎல் 2023 : 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அரங்கேறிய தரமான சம்பவங்கள்..!! | ipl 2022 iconic moments

இந்தியாவின் முக்கிய டி20 தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் எதிர்பாராத நேரத்தில் பல அதிரடி சம்பவங்கள் அரங்கேறி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அணிகள், அதிரடியான விதத்தில் வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது.இந்நிலையில் ஐபிஎல் 2023 தொடருக்கு முன், கடந்த ஐபிஎல் தொடரில் அரங்கேறிய தரமான சம்பவங்கள் குறித்து காண்போம்.
இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் கடைசி நேரத்தில் பல அணிகள் திரில் வெற்றிகள் பெற்றுள்ளன, அந்த வெற்றிகள் மற்றும் அதனை பெற்று தந்த அதிரடி ஆட்டங்கள், வீரர்கள் குறித்து ஒரு பார்வை :
தல தோனியின் மிரட்டல் சம்பவம் :
ஐபிஎல் அதிரடி போட்டியாக கருதப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி தான் என்று கூறினால் மிகையில்லை. இந்த இரு அணிகளும் மோதும் போட்டியில் என்றும் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது, எனவே இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியை காண தனி கூட்டம் உள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 21 , 2022 அன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற கடைசி 3 ஓவர்களில் 42 ரன்கள் தேவை பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று விட்டது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில், 18 வது ஓவரில் எம்.எஸ்.தோனி மற்றும் பிரிட்டோரியஸ் ஜோடி 14 ரன்கள் பெற்று 2 ஓவர்களில் 28 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற நிலைக்கு போட்டியை மாற்றியது.
அதன்பின் 19 வது ஓவரில் பும்ரா 11 ரன்கள் வழங்கிய நிலையில், ஜெயதேவ் உனட்கட் வீசிய 20 வது ஓவரில் ஐபிஎல் தொடரின் மிக சிறந்த பினிஷர் ஆன எம்.எஸ்.தோனி 1 சிக்ஸ் மற்றும் 2 பவுண்டரி அடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று தந்தார், மேலும் 2வது பேட்டிங் செய்யும் போது 20 வது ஓவரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் மற்றும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் தெவதியாவின் அதிரடி ஆட்டம் :
ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டுகளில் கடைசி ஓவரில் அசத்தலாக சிக்ஸர்கள் அடித்து வெற்றிகள் பெறுவதில் முக்கிய வீரராக திகழ்பவர் ராகுல் தெவதியா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 2 தரமான சம்பவங்களை தெவதியா ஐபிஎல் தொடரில் பதிவு செய்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கிய ராகுல் தெவதியா பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலர் ஷெல்டன் காட்ரெல் வீசிய 20 வது ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அணிக்கு வெற்றியை பெற்று தந்து அசத்தினார்.
அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் தெவதியா மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஒடியன் ஸ்மித் வீசிய 20 வது ஓவரில் கடைசி 2 பந்துகளில் சிக்ஸர்கள் அடித்து குஜராத் அணிக்கு மிரட்டல் வெற்றி பெற்று தந்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாஹல் மற்றும் ஜோஸ் பட்லர் சம்பவம் :
2022 ஆம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடிய போட்டியில் அசத்தல் சம்பவங்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்து அசத்தினார், குறிப்பாக 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 103 (61) ரன்கள் பெற்றார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சிறப்பான பேட்டிங் வெளிப்படுத்தி ரன்கள் குவித்து வந்தது, அப்போது ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 17 வது ஓவரை ஸ்பின்னர் சாஹல் இடம் வழங்கிய போது அற்புதமான பவுலிங் செய்த சாஹல் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டுகளை பெற்று ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றினார்.
இதன்மூலம் 178/4 என்ற நிலையில் இருந்த கொல்கத்தா அணி ஒரே ஓவரில் 180/8 என்று மாறியது, மேலும் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. கடந்த 2022 ஆம் ஆண்டில் பதிவான ஒரே ஹாட்ரிக் சாஹல் உடையது தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் மறக்க முடியாத போட்டியாக இந்த போட்டி பதிவாகி உள்ளது.
பேட் கம்மின்ஸ் செய்த தரமான சம்பவம் :
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடிய போட்டியில் கொல்கத்தா அணியின் வேகப்பந்து பவுலர் பேட் கம்மின்ஸ் தனி ஒருவனாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று தந்தார். இந்த போட்டியில் மும்பை அணி 162 ரன்கள் இலக்காக கொல்கத்தா அணிக்கு அளித்த நிலையில், கொல்கத்தா அணி முன்னணி பேட்ஸ்மேன்கள் மும்பை அணியின் பவுலிங்கில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தார்கள்.
இந்நிலையில் 41 பந்துகளில் 61 ரன்கள் பெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி இருந்த போது களத்தில் இறங்கிய பேட் கம்மின்ஸ் அரங்கம் அதிரும் வகையில் 15 பந்துகளில் 56* ரன்கள் பெற்று அசத்தினார், இதன்மூலம் ஐபிஎல் தொடரில் வேகமாக அரைசதம் அடித்த கே.எல்.ராகுல் சாதனையை சமன் செய்ததோடு மட்டுமல்லாமல் கொல்கத்தா அணிக்கு வெற்றியும் பெற்று தந்து அசத்தினார்.