இந்திய அணி இரு இடதுகை பேட்ஸ்மேன்கள் கட்டாயம்: ரவி சாஸ்திரி வலியுறுத்தல்

மும்பை: இந்திய அணியின் டாப் ஆர்டரில் இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்கள் கட்டாயம் தேவை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
உலகக்கோப்பைத் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்திய அணியில் சரியான பேலன்ஸை ஏற்படுத்த வேண்டும். இந்திய அணியின் டாப் ஆர்டரில் நிச்சயம் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் டாப் 6 பேட்டிங் வரிசையில் 2 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும் பட்சத்தில் இந்திய அணி சரியான பேலன்ஸை கொண்டு வர முடியும். இந்திய வீரர்கள் ரிஷப் பந்த் காயம் காரணமாக விளையாட முடியாத சூழல் உள்ளது. ஆனால் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. ஏற்கனவே விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் எந்த சீனியர் வீரரின் இடத்தையும் எளிதாக நிரப்பும் திறமை கொண்டவர்கள். அதேபோல் நேஹல் வதேரா, சாய் சுதர்சன் உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். இந்திய வெள்ளைப்பந்து அணியில் இடம்பிடிப்பதற்காக ஏராளமான வீரர்கள் திறமையுடன் காத்திருக்கிறார்கள். இவர்களில் உலகக்கோப்பைக்குள் தயார் செய்வதே இந்திய அணியின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஆடிவந்த ஷிகர் தவான் ஓரம்கட்டப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒருநாள் அணியிலும் தேர்வு செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே இடதுகை பேட்ஸ்மேன்கள் டாப் ஆர்டரில் இல்லாமல் இந்திய அணி ஏராளமான ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.