ஜாலியாக பீச் வாலிபால்.. இந்திய வீரர்கள் உற்சாக கொண்டாட்டம்.. இதுதான் கிரிக்கெட் பயிற்சியா?

டொமினிக்கா: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடற்கரையில் ஜாலியாக பீச் வாலிபால் விளையாடும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
இருப்பினும் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஷ்வால், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராவதற்காக கடந்த வாரமே ரஹானே தலைமையிலான இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டனர். ஷர்துல் தாக்கூர், கேஎஸ் பரத், இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஷ்வால், ருதுராஜ், அஸ்வின், நவ்தீப் சைனி, அக்சர் படேல் உள்ளிட்டோர் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மற்ற வீரர்களுடன் இணைந்துள்ளார். இன்னும் கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே இந்திய அணியுடன் இணையவில்லை. அவரும் சில நாட்களில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் உள்ள டொமினிக்கா கடற்கடையில் இந்திய வீரர்கள் உற்சாகமாக பீச் வாலிபால் விளையாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் உற்சாகமாக காணப்படுகின்றனர். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணி இளம் வீரர்களுடன் பங்கேற்க உள்ளது. இதுகுறித்து கொஞ்சம் கவலையின்றி பயிற்சி செய்யாமல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது சரியா? இன்னும் விடுமுறை நாட்களில் இருந்து வீரர்கள் வெளிவரவில்லை, இதற்காக தான் விரைந்து வெஸ்ட் இண்டீஸ் சென்றீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.