WOMEN’S T20 WORLD CUP 2023 : இந்திய மகளிர் அணி உலக கோப்பை அரங்கில் அசத்தல்..!! தொடரும் வெற்றிகள்..!!

தென்னாப்பிரிக்காவில் மகளிர் டி 20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள். இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய நிலையில் லீக் சுற்றின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை சந்தித்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹேலி மேத்யூஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில், இந்திய அணி பவுலிங் செய்ய தயாரானது மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், அணியின் அனுபவ வீராங்கனைகள் ஸ்டீஃபானி டெய்லர் மற்றும் ஷெமைன் காம்பெல்லே நல்ல தொடக்கத்தை அளித்தார்கள்.
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 118 ரன்கள் பதிவு செய்தது.இந்திய அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.1 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்று அசத்தினார்கள், குறிப்பாக இளம் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் 44*(32) ரன்கள் பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்து அசத்திய இளம் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார், இந்நிலையில் உலக கோப்பை அரங்கில் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தனது பிரிவில் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.