WOMEN’S T20 WORLD CUP 2023 : அனல் பறந்த அரையிறுதி போட்டி..!! இறுதி வரை போராடிய இந்தியா தோல்வி ..!!

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி 20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள், இறுதி ஓவர் வரை நடைபெற்ற போராட்டத்தில் இந்திய அணி எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.
கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி 25(26 )மற்றும் பெத் மூனி 54(37) சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள்.
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடிய அணியின் கேப்டன் மெக் லானிங் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 49*(34) ரன்கள் பதிவு செய்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 172 ரன்களை பதிவு செய்தது.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷாபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா உடனுக்குடன் ஆட்டமிழந்த நிலையில், தடுமாறிய இந்திய அணியை தூக்கி நிறுத்தும் வகையில் இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்ற போது எதிர்பாராத விதமாக போட்டி தலைகீழாக மாறியது.
இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43(24) ரன்களில் ஆட்டமிழந்தார், அடுத்து இந்திய அணியின் தூணாக இருந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52(34) ரன்கள் பதிவு செய்த நிலையில் ரன் அவுட் ஆகி ஏமாற்றத்தை அளித்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் இறுதிவரை முயன்றும் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார், இந்திய அணி இறுதி வரை போராடியும் உலக கோப்பை கனவு கனவாகவே மீண்டும் தொடர்கிறது என்று இந்திய அணியின் ரசிகர்கள் கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.