இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மோதும் ஆட்டம்... எந்தெந்த நேரத்தில், எந்தெந்த சேனல்களில் பார்க்கலாம்... தெரியுமா?

டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரை ஜியோ சினிமா, பான்கோட் ஆகிய செயலிகள் மூலம் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இருக்கிறது. அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள்,மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஜூலை 12-16, ஜூலை 20-24 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதேபோல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அடுத்த மாதம் 3, 6, 8, 12, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதிமுதல் துவங்கவுள்ள டெஸ்ட் தொடர், இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு துவங்கி நடைபெறும். ஒருநாள் தொடர் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும். டி20 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கி நடைபெறும்.
இத்தொடரை ஸ்டார், சோனி நிறுவனங்கள் ஒளிபரப்ப முன்வரவில்லை. டிடி ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் போட்டியை நேரலையில் ஒளிபரப்ப உள்ளது. டெஸ்ட் தொடரை மட்டும் தொலைக்காட்சியில் பார்க்க முடியாது. டிடி ஸ்போர்ஸ்ட் நிறுவனம் ஒருநாள், டி20 போட்டிகளை மட்டும்தான் நேரலை செய்ய உள்ளது. ஜியோ சினிமா, பான்கோட் ஆகிய ஆப்கள் மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளை ஆன்-லைனில் காண முடியும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.