IND VS AUS TEST 2023 : 3வது டெஸ்ட் போட்டியில் மோசமான நிலையில் இந்தியா ..!! ஆஸ்திரேலியா அணிக்கு முதல் வெற்றிக்கான வாய்ப்பு ..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 3 வது டெஸ்ட் போட்டியில் 2வது நாள் முடிவில் மிகவும் மோசமான நிலையில் இந்திய அணி உள்ளது. இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய ஆஸ்திரேலியா அணி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலையில் உள்ள நிலையில், இந்தூரில் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன்பின் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இந்த போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலியா அணியின் பவுலிங்கில் மிகவும் திணறியது, குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் நாதன் லியோன் 8 விக்கெட்டுகளை பெற்று இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு சவால் விடுத்தார்.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் உடனுக்குடன் ஆட்டம் இழந்த நிலையில் அனுபவ வீரர் செதேஷ்வர் புஜாரா மிகவும் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தார், தனி ஒருவராக போராடிய புஜாரா ஆட்டமிழந்த உடன் இந்திய அணியின் பேட்டிங் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 2வது நாள் முடிவில் 163 ரன்கள் பதிவு செய்து ஆல் அவுட் ஆனது,அதிகபட்சமாக புஜாரா 59 (142) ரன்களை பெற்றார்.
ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் லியோன் சிறந்த பௌலிங்கை வெளிப்படுத்தினர், ஆஸ்திரேலியா அணிக்கு 2வது இன்னிங்சில் 76 ரன்கள் இலக்காக அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றி விடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஆஸ்திரேலியா அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இந்த 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று விட்டால் தொடரை சமன் செய்யும் வாய்ப்பை தக்க வைத்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது, இந்திய அணி குறைவான இலக்கை ஆஸ்திரேலியா அணிக்கு அளித்திருந்தாலும் நாளை நடைபெறும் போட்டியில் சிறந்த பௌலங்கை வெளிப்படுத்தி வெற்றி [பெற முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.