IND VS AUS TEST 2023 : இந்திய அணி அபார வெற்றி..!! பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்து அசத்தல்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெல்லியில் விளையாடிய 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது, இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடர் கோப்பையை தக்க வைத்துள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்கள் பதிவு செய்தது, அதன்பின் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று பேட்டிங்கில் திணறிய போதும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உதவியுடன் 262 ரன்களை பதிவு செய்தது, எனவே ஆஸ்திரேலியா அணி 1 ரன் லீடு உடன் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய தொடங்கியது.
இந்த போட்டியில் 2வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் பெற்று மிகவும் வலுவான நிலையில் இருந்தது, அதை அடுத்து டெஸ்ட் போட்டியின் 3 வது நாளில் இந்திய அணி தனது சுழற்பந்து வீச்சாளர்கள் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆர்டரை துவம்சம் செய்தது என்று கூறினால் மிகையில்லை.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் நிலையான தொடக்கத்தை அளித்தும் அதை தக்க வைத்துக் கொள்ளாமல் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் உடனுக்குடன் விக்கெட்களை இழந்தார்கள், எனவே ஆஸ்திரேலியா அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஆல்ரவுண்டர் ஜடேஜா 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார், முன்னணி பவுலர் அஸ்வின் 3 விக்கெட்டுகளை பெற்றார்.
இந்நிலையில் 114 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 26.4 ஓவர்களில் 118 ரன்கள் பெற்று டெஸ்ட் தொடரில் 2 வது வெற்றியை பெற்று அசத்தியது, இந்திய அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச அளவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 100வது வெற்றியாக இது பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த 2023 பார்டர் கவாஸ்கர் தொடரில் இரண்டு வெற்றிகளை பெற்று இந்திய அணி 2-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.