ஸ்டார்க் வேகத்தில் இந்திய அணி சுருண்டது.!! ஆஸ்திரேலியா அணி அதிரடி வெற்றி..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்கள், இதில் இந்திய அணியை ஆஸ்திரேலியா அணி துவம்சம் செய்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் உடனுக்குடன் ஆட்டமிழந்து அதிர்ச்சியை அளித்தார்கள்.குறிப்பாக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் ஷுப்மான் கில் மற்றும் சூர்யா குமார் யாதவ் ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
இந்நிலையில் இந்திய அணி சார்பில் பொறுப்புடன் விளையாடிய முன்னணி வீரர் விராட் கோலி 31(35) ரன்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இறுதிவரை களத்தில் அக்சர் படேல் 29*(29) மட்டும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி வெறும் 117 ரன்கள் மட்டும் பதிவு செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த மிச்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார், அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 51*(30) மற்றும் மிட்செல் மார்ஷ் 66*(36) அதிரடி ஆன ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து இந்திய அணியின் பவுலர்களை சிதறடித்தார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் வெறும் 11 ஓவர்களில் 121 ரன்கள் பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது, மேலும் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சிறப்பான பவுலிங் செய்த மிச்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முழு நேர ஒருநாள் கேப்டனாக ரோஹித் சர்மா தலைமையேற்ற பிறகு சொந்த மண்ணில் சந்திக்கும் முதல் ஒருநாள் போட்டி தோல்வியாக இது பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.