IND VS AUS ODI 2023 : ஸ்டார்க் வேகத்தில் இந்திய அணி திணறல்..!! ராகுல், பாண்டியா நிதான ஆட்டம்.!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் ஒருநாள் போட்டியில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகிறார்கள், இரு அணிகளிலும் ஒருநாள் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்து ஆஸ்திரேலியா அணியின் சிறந்த பேட்டிங் ஆர்டரை துவம்சம் செய்தது, குறிப்பாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் முஹம்மது ஷமி மற்றும் முகமது சிராஜ் சிறப்பாக பவுலிங் செய்து முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் பதிவு செய்தது, ஆஸ்திரேலியா அணி சார்பில் சிறப்பாக பேட்டிங் செய்த மிட்செல் மார்ஷ் 81(65) ரன்கள் பெற்றார்.இந்திய அணி சார்பில் வெறும் 6 ஓவர்கள் வீசி சிராஜ் 3 விக்கெட்களையும், ஷமி 5.4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்களையும் பெற்று அசத்தினார்கள்.
அதன்பின் களமிறங்கிய இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆரம்பமே ஆஸ்திரேலியா அணியின் பவுலிங்கில் திணறியது, குறிப்பாக அதிரடியாக பவுலிங் செய்த மிச்செல் ஸ்டார்க் முன்னணி பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, சூர்யா குமார் யாதவ் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
தற்போதைய நிலையில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழந்து வெறும் 70 ரன்கள் பதிவு செய்துள்ளது, இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி களத்தில் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒருநாள் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்வதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.