உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா நுழையுமா.. வாய்ப்புகள் எப்படி..? முழுமையான அலசல்!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23க்கான சுழற்சி விரைவில் முடிவடைய உள்ளது. இன்னும் மூன்று டெஸ்ட் தொடர்கள் மற்றும் 8 போட்டிகள் ஜூன் 2023 இல் இறுதிப் போட்டிக்கு முன் விளையாடப்படும். இந்த இரண்டு ஆண்டுகளில் 9 அணிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜூன் மாதத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் யார் பங்கேற்பார்கள் என்பதில் தொடர்ந்து சஸ்பென்ஸ் உள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 75.56% புள்ளிகளுடன், ஆஸ்திரேலியா தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் வலுவாக உள்ளனர்.
இந்தியா 58.93% புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை 53.33% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 48.72% புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 சுழற்சியில் எஞ்சியிருக்கும் மூன்று தொடர்கள் இந்தியா vs ஆஸ்திரேலியா (நான்கு டெஸ்ட்), நியூசிலாந்து vs இலங்கை (இரண்டு டெஸ்ட்) மற்றும் தென்னாப்பிரிக்கா vs மேற்கிந்திய தீவுகள் (இரண்டு டெஸ்ட்) ஆகும். இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இந்தியா தகுதி பெற வேண்டுமானால், அதற்கான சாத்தியக்கூறுகளை இதில் பார்க்கலாம்.
1. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை இந்தியா 4-0, 3-0 அல்லது 3-1 என வென்றால்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0, 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றினால், மற்ற இரண்டு டெஸ்ட் தொடர்களின் முடிவுகளையும் பொருட்படுத்தாமல் இந்தியா நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 0-4 என தோற்றால்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 0-4 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தால், இந்தியா 45.4% புள்ளிகளுடன் முடிவடைந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை முழுமையாக இழந்துவிடும்.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 2-1, 2-0 அல்லது 1-0 என வென்றால்
இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால், இந்திய அணியின் இறுதி புள்ளிகள் 58.8% ஆக இருக்கும். 2-0 எனில், அது 60.65% ஆகவும், 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் 56.94% ஆகவும் இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், தென்னாப்பிரிக்கா போட்டியிலிருந்து வெளியேறும்.
ஆனால், நியூசிலாந்தில் இலங்கை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே இந்தியாவின் வாய்ப்புகள் அமையும். நியூசிலாந்தில் இலங்கை அணி ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்டில் வெற்றிபெறவில்லை என்றால், இந்தியாவுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.
மேலும் இரண்டு டெஸ்டிலும் இலங்கை தோல்வியடைந்தால், இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடுவது உறுதி. ஆனால் இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
4. இந்தியா தொடரை சமன் செய்யும் அல்லது ஆஸ்திரேலியா தொடரை வெல்லும்
தொடரை 2-2 என இந்தியா சமன் செய்தால், புள்ளிகள் பட்டியலில் 56.4% ஆக இருக்கும். தென்னாப்பிரிக்கா போட்டியிலிருந்து வெளியேறும். இலங்கை நியூசிலாந்துக்கு எதிராக தொடரை வெல்லவில்லை என்றால் இந்தியா தகுதி பெறும்.
இந்தியா 0-2, 1-2, 1-3 அல்லது 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தால், இந்தியா மற்ற அணிகளை பெரிதும் நம்பியிருக்கும். இந்தியா 0-1 என்ற கணக்கில் தோற்றால், இந்திய அணியின் இறுதி புள்ளிகள் 51.39% ஆக இருக்கும். மேலும் அப்போதும் இந்திய அணி இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவின் முடிவுகளைப் பொறுத்து இருக்கும்.