ராஜ்கோட்டில் சூர்யகுமார் அதிரடி..! தொடரை வென்று அசத்தியது இந்தியா ..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 08, 2023 & 14:15 [IST]

Share

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 3-வது டி20 போட்டியில் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் விளையாடினார்கள். இந்த இறுதிப் போட்டியில் வெல்லும் அணி தான் தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  போட்டியாக அமைந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். கடைசியாக நடந்த டி20 போட்டியில்  இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையிலும் தனது ப்ளேயிங்  லெவனில் எந்த மாற்றமும் செய்யாமல் இறுதி போட்டியில் பங்கேற்றது.

இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான் 1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், அதன் பின் களமிறங்கி  அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தாலும், தனது விக்கெட்டை விரைவில் பறிகொடுத்தார்.

அடுத்து  களமிறங்கிய அணியின் மிரட்டல் பேட்ஸ் மேன் சூர்யா குமார் யாதவ் தொடக்க வீரர் கில் உடன் இணைந்து இலங்கை அணியின் பவுலர்களை துவம்சம் செய்தார். கில் 46 ரன்களில் அவுட்டான நிலையில், இறுதி வரை ஆட்டமிழக்காமல் சூர்ய குமார் 51 பந்துகளில்  9-சிக்ஸர்கள் 7-பவுண்டரிகள்  உட்பட 112*  ரன்களை அடித்து அரங்கத்தை அதிர வைத்தார். 

இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 228 ரன்களை பதிவு செய்தது. அதன்பின் 229 ரன்கள் என்ற இமாலய இலக்கை அடைய  களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் இந்திய அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் உடனுக்குடன் தங்களின் விக்கெட்களை பறிகொடுத்தனர்.

சற்று நிதானமாக விளையாடிய அணியின் கேப்டன் ஷனாகவும் 23(17) ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் அதிரடியான பவுலிங்கில் 16.4 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று 2-1 என்ற நிலையில் டி20 தொடரை கைப்பற்றியது.

இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உதவும் வகையில் சதம் அடித்து அசத்திய சூர்யா குமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்திய அக்சார் பட்டேல் தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த தொடரின்  வெற்றியின் மூலம் இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.