IND vs NZ 2nd T20I : 100 ரன்கள் இலக்கு.. கடைசி வரை திணறிய இந்தியா.. போராடி வெற்றி!!

IND vs NZ 2nd T20I : இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியில், நேற்று இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது.
லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து, இந்தியாவுக்கு எதிராக 99 ரன்கள் மட்டுமே எடுத்து இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. இருப்பினும், கடைசி ஓவர் வரை போராடியே 100 ரன்கள் இலக்கை இந்தியா எட்டியது.
தற்போது இரு அணிகளும் தொடரில் சமனில் உள்ள நிலையில், தொடரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது.
இந்தியா vs நியூசிலாந்து இரண்டாவது டி20 ஹைலைட்ஸ்
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதி வரை போராடிய நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது.
இது டி20யில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்தின் மிக குறைந்தபட்ச ஸ்கோராகும். முன்னதாக, 2021 இல் 111 ரன்களிலும், 2020 இல் 126 ரன்களிலும் இந்தியாவுக்கு எதிராக மற்ற குறைந்த ஸ்கோரை நியூசிலாந்து பதிவு செய்துள்ளது.
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இந்தியாவின் பேட்டிங்கைப் பொறுத்தவரை, இந்தியா தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால், எளிதான ஸ்கோரை எட்ட முடியுமா என்பதே போராட்டமாக மாறியது. இஷான் கிஷான், சுப்மான் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் ஆரம்பத்திலேயே வெளியேறியதால் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் மிக விரைவில் மூன்று விக்கெட்டுகளை இழந்தனர்.
நல்ல ஃபார்மில் இருந்த வாஷிங்டன் சுந்தர் சூர்யகுமாருடனான தவறான தொடர்பு காரணமாக ரன்-அவுட் ஆனார். இருப்பினும், சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இன்னிங்ஸை நிலைப்படுத்தினர், ஆனால் கடைசி 6 பந்துகளில் இந்தியாவுக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. சூர்யகுமார் பவுண்டரி அடித்து 1 பந்து மீதமிருக்க இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.