IND VS AUS TEST 2023 : எங்க ஏரியாவுல நாங்க தான் கில்லி என்று சொல்லி அடிச்ச இந்தியா..! அபார வெற்றி..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை துவம்சம் செய்து, இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது.
டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் தொடக்கத்தில் இந்திய அணி வீரர்கள் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் களத்தில் நிதானமாக விளையாட தொடங்கினார்கள், ஆஸ்திரேலியா அணி சார்பில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்திய டாட் மர்பி ஜடேஜா மற்றும் அக்சர் படேல் கூட்டணியை தகர்த்தார்.
இந்திய அணிக்கு ரன்கள் குவித்த ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா 70(185) ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து அக்சர் படேல் 84(174) ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இறுதியாக மொஹமத் ஷமி சிறப்பாக விளையாடி 37(47) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜா சுழலில் உடனுக்குடன் ஆட்டமிழந்தார்கள், குறிப்பாக அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்கள்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 25*(51) தனியாக இறுதிவரை களத்தில் போராடி கொண்டிருந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி முதல் டெஸ்ட் 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது, இந்த வெற்றி முழுக்க முழுக்க அணியின் பவுலர்களை சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் சார்பில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி பேட்டிங்கில் அரைசதம் அடித்து பவுலிங்கில் 7 விக்கெட்டுகளை பெற்ற ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா போட்டியின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இந்த தொடரை 3-0 என்ற நிலையில் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ள நிலையில் இந்த முதல் டெஸ்ட் வெற்றி நம்பிக்கை அளிப்பதாக இந்திய ரசிகர்கள் இணையத்தில். பதிவிட்டு வருகிறார்கள்.