உலகக்கோப்பை அட்டவணையை இன்று பிரம்மாண்டமாக வெளியிடும் ஐசிசி

அகமதாபாத்: இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிடவுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்குவதற்கான 100 நாள் கவுண்டவுன் இன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதற்காக பிசிசிசி மற்றும் ஐசிசி இணைந்து பிரம்மாண்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விண்வெளிக்கு செல்லும் பலூன் மூலமாக உலகக்கோப்பையை வளி மண்டலத்தில் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது பிசிசிஐ.
உலகக்கோப்பைக்கான கவுண்டவுன் தொடங்கும் போது, உலகக்கோப்பையை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திற்கு மேல் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின்னரே உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை 18 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் எப்போது, எங்கு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதனை முதல் போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோதவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் சென்னை மற்றும் பெங்களூரு மைதானங்களில் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகள் மும்பை வான்கடே மைதானம் மற்றும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.