IND VS AUS TEST 2023 : 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தோர் பிட்ச் தரமற்றது..!! ஐசிசி அதிரடி..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 3 வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தின் பிட்ச் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ஐசிசி இந்த பிட்ச் தரமற்றது என்று சான்றிதழ் அளித்துள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடரின் 3 வது டெஸ்ட் போட்டி மிகவும் விரைவாக 3 வது நாள் மதிய இடைவேளைக்கு முன்பே முடிவடைந்தது, அதாவது முதல் நாளில் 14 விக்கெட்டுகளும் இரண்டாவது நாளில் 16 விக்கெட்டுகளும் விழுந்தது. இதையடுத்து போட்டி நடைபெற்ற மைதானத்தின் மீது பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்த விமர்சனங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் ஐசிசி தரப்பில் இருந்து, ஹோல்கர் மைதானத்தின் பிட்சிற்கு மிகவும் மோசமான பிட்ச் என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, அதாவது ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் அந்த போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு ஐசிசி தரப்பில் இருந்து தரம் குறித்து சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஆடுகளத்திற்கு சராசரி என்று சான்றிதழ் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தோர் பிட்ச் மோசமானது என்று சான்றிதழ் அளிக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ தரப்பில் இருந்து விளக்கம் அளிக்க 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிட்ச் குறித்து போட்டியின் நடுவர் கிறிஸ் பிராட் ஐசிசிக்கு அளித்துள்ள அறிக்கையில் பிட்ச் மிகவும் வறண்டு இருந்ததாக கூறினார், மேலும் கணிக்க முடியாத அளவுக்கு போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அதிக அளவில் பவுன்ஸ் மற்றும் ஸ்பின் ஆனதாக கூறியுள்ளார்.
இதனால் இந்தோர் பிட்சிற்கு தரத்தில் 3 மைனஸ் புள்ளிகள் ஆனதாக தெரிய வந்துள்ளது, ஐசிசி விதியின்படி ஒரு மைதானத்திற்கு 5 ஆண்டு காலத்தில் 5 மைனஸ் புள்ளிகள் வழங்கப்பட்டால் ஒரு ஆண்டிற்கு அந்த மைதானத்தில் எந்த போட்டியும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 3வது டெஸ்ட் போட்டிக்கான மைதானம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதால் சரியாக பிட்சை தயார் செய்ய முடியாத நிலையில் ஏற்பட்டிருக்கலாம் என்று இணையத்தில் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
.