2022 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை ஐசிசி வெளியிட்டது..! இந்திய முன்னணி வீரர்கள் இடம்பெறாமல் ஏமாற்றம்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 25, 2023 & 12:50 [IST]

Share

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தில் கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர்களை வைத்து சிறந்த அணிகளை வெளியிடும், அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின்  சிறந்த ஒருநாள் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளை ஐசிசி தெரிவித்துள்ளது. இதில் இந்திய ஆடவர் அணியின் முன்னணி வீரர்கள் யாரும் இடம்பெறாத நிலையில் இரண்டு இளம் இந்திய வீரர்கள் இடம்பெற்று அசத்தியுள்ளார்கள்.

இந்திய அணி கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் விளையாட முழு வீச்சில் பல டி20 தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தியது, பெரிதாக ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் 2022 ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் தான் நடைபெற்றது, எனவே ஐசிசி  ஒருநாள் அணியில் முன்னணி வீரர்கள் யாரும்  இடம்பெறவில்லை என்பது போன்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணியின் வீரர்களில் சிறப்பான பங்களிப்பை  அளித்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது சிராஜ் இருவரும் ஐசிசி ஒருநாள் அணியில் இடம்பெற்று  இந்திய அணிக்கு பெருமையை பெற்று தந்துள்ளனர். 

ஸ்ரேயாஸ் ஐயர் : 

இந்திய அணி சார்பில் கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை ஸ்ரேயாஸ் ஐயர் வெளிப்படுத்தி இருந்தார், அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேன் இடத்தில் களமிறங்கி அசத்தல் பேட்டிங் கால் எதிரணி பவுலர்களை மிரட்டினார். கடந்த ஆண்டு 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் மொத்தமாக ஒரு சதம் மற்றும் 6 அரைசதம் உட்பட 724 ரன்களை சர்வதேச அரங்கில் பதிவு செய்துள்ளார்.

ஸ்ரேயாஸ் 2022-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 55.69 சராசரியுடன் தனி ஒருவனாக அணியின் பேட்டிங்கில் அசத்தியுள்ளார், தனது அசத்தல் பேட்டிங் மூலம் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகமது சிராஜ் :    

இந்திய அணியின்  தற்போதைய நிலையில்  முன்னணி பவுலராக விளங்கிவரும் முகமது சிராஜ்  ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக பவுலிங் செய்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளார், ஒரு காலத்தில் தனது பௌலிங்கால் பல விமர்சனங்களுக்கு உள்ளன சிராஜ் அதில் இருந்து மீண்டு முறையான பயிற்சியின் மூலம் தற்போது அசத்தல் பௌலிங்கை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.     

கடந்த ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிரடி பௌலிங்கை வெளிப்படுத்திய சிராஜ் 15 ஒருநாள் போட்டிகளில் 24 விக்கெட்களை பெற்று அசத்தினார், குறிப்பாக சிறந்த எகானமி உடன் பவுலிங் செய்துள்ளார்.சிராஜ் கடந்த ஆண்டு நடந்த ஒரு ஒருநாள் போட்டியில் 3/29 சிறந்த ஸ்பெல் ஆகா பதிவானது.

இந்திய அணியின் முன்னணி பௌலர் ஜஸ்பிரிட் பும்ரா காயம்பட்டு ஓய்வில் இருக்கும் நிலையில் அணியின் பவுலிங் யூனிட்டை வழிநடத்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இந்திய மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒரு நாள் உலக கோப்பை தொடரில் முகமது முக்கிய பங்காற்றுவர் என்பதில் ஐயமில்லை. 

ஐசிசியின்  2022 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் ஆடவர் அணி : பாபர் அசாம் (கேபட்ன் , பாகிஸ்தான்), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), ஷாய் ஹோப் (மேற்கிந்திய தீவுகள்), ஷ்ரேயாஸ் ஐயர் (இந்தியா), டாம் லாதம் (நியூசிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), மெஹிதி ஹசன் மிராஸ் (வங்காளதேசம்), அல்சாரி ஜோசப் ( வெஸ்ட் இண்டீஸ்), முகமது சிராஜ் (இந்தியா), டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து), ஆடம் ஜாம் (ஆஸ்திரேலியா).

ஐசிசி அறிவித்த 2022 ஆம் ஆண்டின் ஒரு நாள் மகளிர்  அணியில் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், ரேணுகா சிங் ஆகியோர் இடம்பெற்று இந்திய அணிக்கு பெருமையை பெற்று தந்துள்ளார்,அதில் ஐசிசியின் ஒருநாள் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டது ஒருநாள் போட்டிகளில் அவரது திறனை வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்மிருதி மந்தனா : 

இந்திய மகளிர் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கும் ஸ்மிருதி மந்தனா கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சிறந்த முறையில் பங்களிப்பை அளித்து அசத்தியுள்ளார்,குறிப்பாக ஒரு சதம் மற்றும் 6 அரைசதங்கள் சர்வதேச அரங்கில் மந்தனா பதிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டில்  ஸ்மிருதி மந்தனாவின் அற்புதமான ஆட்டத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு நாள் உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 123 ரன்கள் அடித்த ஆட்டம் அமைத்துள்ளது, அதன்பின் இங்கிலாந்து மண்ணில் தனது அதிரடி தொடர்ந்து மூன்று போட்டிகளில் 91, 40 மற்றும் 59 ரன்கள் அடித்து அந்த ஆண்டு இறுதியை சிறப்பாக முடித்துள்ளார் .

ஹர்மன்பிரீத் கவுர் :

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்  ஹர்மன்பிரீத் கவுர் கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அணிக்கு தனது சிறப்பான ஆட்டத்தால் பல வெற்றி பெற்று தந்து அசத்தியுள்ளார், குறிப்பாக 2 சதம் மற்றும் 5 அரை சதங்கள் அடித்துள்ளார் ஆல்ரவுண்டர் ஆனா ஹர்மன்பிரீத் 5 விக்கெட்களையும் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 143* ரன்கள் பதிவு செய்தது கவுரின் அசாத்திய ஆட்டத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.ஐசிசியின் ஒருநாள் அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்மன்பிரீத் கவுர் இந்திய அணிக்கு பெருமை தேடி தந்துள்ளார். 

ரேணுகா சிங் : 

இந்திய மகளிர் அணியில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இடம்பெற்ற வேகப்பந்து பவுலர் ரேணுகா சிங் ,தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் ஐசிசியின் ஒருநாள் மகளிர் அணியில் இடம்பெற்று அசத்தியுள்ளார்.

ரேணுகா சிங் கடந்த ஆண்டு தொடக்கத்தில் தான் இந்திய அணியில் இடம்பெற்ற நிலையில், மகளிர் ஒருநாள் உலக கோப்பை அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.கடந்த ஆண்டில் மொத்தம் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரேணுகா 18 விக்கெட்டுகளை பெற்று அசத்தினார். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒருநாள் அணியில் இடம்பெற்ற ரேணுகா சிங்,ஐசிசியின் ஒருநாள் அணியில் இடம்பெற்ற அசத்தியுள்ளார். இந்திய மகளிர் அணியில் முக்கிய பவுலராக வருங்காலத்தில் ரேணுகா சிங் இருப்பார் என்பதில் ஐயமில்லை.        

ஐசிசி யின் சிறந்த ஒருநாள் மகளிர் அணி : அலிசா ஹீலி (வி.கீ) (ஆஸ்திரேலியா), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), லாரா வால்வார்ட் (தென்னாப்பிரிக்கா), நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து), பெத் மூனி (ஆஸ்திரேலியா), ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்) (இந்தியா), அமெலியா கெர் (நியூசிலாந்து), சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), அயபோங்கா காக்கா (தென்னாப்பிரிக்கா), ரேணுகா சிங் (இந்தியா), ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்பிரிக்கா).