தந்தை மறைவுக்கு பின் விராட் கோலி ஆட்டம் ஆட்டத்தை மறக்க முடியாது: இஷாந்த் சர்மா

மும்பை: 17 வயதில் தந்தை மறைந்த பின், அடுத்த நாளிலேயே மைதானத்தில் களமிறங்கி விராட் கோலி ஆடிய ஆட்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். அதேபோல், ஒருவேளை தனக்கு அதுபோன்ற சூழல் வந்திருந்தால் மைதானத்திற்கு வந்திருக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இஷாந்த் சர்மா, விராட் கோலி தந்தை மறைந்த போது நிகழ்ந்த சம்பவங்கள் பற்றியும், விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றியும் பேசியுள்ளார். அந்த வீடியோவை விராட் கோலியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
அதில், விராட் கோலியின் டிக்ஸ்னரியில் நடக்கும் என்ற வார்த்தையே கிடையாது. அவர் நடத்திக் காட்டுவோம் என்று சொல்லுவார். ஒரு விஷயத்தை செய்து முடிப்போம் என்று நம்பிக்கை வைத்தால், எதையும் சாதிக்கலாம் என்று நம்புகிறார் விராட் கோலி. சிறுவயதில் இருந்தே விராட் கோலி அப்படிதான். 17 வயதில் டெல்லி அணிக்காக ஆடிய போது, திடீரென அவரின் தந்தை மறைந்துவிட்டதாக எங்களுக்கு தெரிய வந்தது. அவர் அப்போது சோகமாகவும், தனியாகவும் அமர்ந்திருந்தார்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் மைதானத்திற்குள் களமிறங்கி பேட்டிங் செய்து, ஆட்டத்தையும் வென்று கொடுத்தார். எனக்கு இதுவரை அந்த விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை எனக்கு அதுபோல் நிகழ்ந்திருந்தால், மைதானத்திற்கே வந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். அங்கிருந்து விராட் கோலி மிகச்சிறந்த கேப்டனாக உருவெடுத்தார்.
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி வந்த போது, ஃபிட்னஸ் கலாச்சாரத்தை அவர்தான் கொண்டு வந்தார். அனைவரும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கினார். நீங்கள் ஷமியில் தொடங்கி எந்த பந்துவீச்சாளரை வேண்டுமானாலும் பாருங்கள். அவர்கள் விராட் கோலிக்கு கீழ் விளையாடிய போது, பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தி இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.