கேப்டன்சி வாய்ப்பை தோனிக்காக மட்டுமே நிராகரித்தேன்: சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி

மும்பை: ஐபிஎல் தொடரின் போது கேப்டன்சி செய்வதற்காக தன்னை அணுகிய வாய்ப்புகளை தோனிக்காக நிராகரித்ததாகவும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் வெறுக்க முடியாத ஒரே கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தான். அதேபோல் தோனி ரசிகர்கள் அனைவரும் தோனியை கொண்டாடும் அளவிற்கு சுரேஷ் ரெய்னாவையும் கொண்டாடி வருகிறார்கள். ஏனென்றால் இந்திய அணியில் தோனிக்கு எப்படி யுவராஜ் சிங் தளபதியாக இருந்தாரோ, அதேபோல் சென்னை அணிக்காக ஆடும் போது தோனியின் தளபதியாய் சுரேஷ் ரெய்னா செயல்பட்டார்.
இதனால் ரசிகர்கள் பலரும் சுரேஷ் ரெய்னாவை ”சின்ன தல” என்று கொண்டாடி வருகிறார்கள். ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றாலும் சென்னை அணிக்காக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்த போது, உடனடியாக சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். அந்த அளவிற்கு சுரேஷ் ரெய்னா தோனியின் உற்ற தளபதியாய் இருந்து வருகிறார்.
அண்மையில் சுரேஷ் ரெய்னா கொடுத்த பேட்டியில் கடைசி வரை தோனிக்காகவே சென்னை அணியில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அந்த பேட்டியில் சுரேஷ் ரெய்னா பேசுகையில், நான் குஜராத் அணிக்காக கேப்டன்சி செய்த பின், ஐபிஎல் தொடரின் பல்வேறு அணிகளும் என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்களின் அணிக்கு கேப்டன்சி செய்ய கேட்டுக் கொண்டார்கள். ஆனால் தோனியிடம் சொன்ன போது, எங்கேயும் போகாதே.. நான் தான் கேப்டன்.. நீ தான் எப்போதும் என் துணை கேப்டன் என்று கூறினார்.
அதனால் நான் எனது கேப்டன் வெற்றிபெற வைப்பதற்காகவும், எனது அணியை வெற்றிபெற வைப்பதற்காகவும் மட்டுமே விளையாடினேன். சென்னை அணியின் துணை கேப்டனாக எப்போதும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன். கேப்டன்சி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை. தோனி ஓய்வை அறிவித்த பின், நானும் விளையாட்டை தொடர்வதற்கான காரணங்கள் இல்லாமல் போனது. ஏனென்றால் அவருக்காகவே நான் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்தேன் என்று கூறியுள்ளார்.