ரவீந்திர ஜடேஜாவை வீழ்த்தி ஐசிசி சிறந்த வீரர் விருதை ஹார்ரி புரூக் வென்று அசத்தல்..!!

ஐசிசியின் பிப்ரவரி மாதத்தின் சிறந்த பிளேயர் விருதை இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹார்ரி புரூக் வென்றார், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர் குடாகேஷ் மோதி ஆகியோரும் இந்த விருதுக்கு தேர்வான நிலையில் ஹார்ரி புரூக் 2வது முறையாக ஐசிசி விருதை வென்று அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணி சார்பில் ஹார்ரி புரூக் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு உதவிய நிலையில், பிப்ரவரி மாதத்தின் ஐசிசியின் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் 2022 டிசம்பர் மாதத்தில் ஐசிசி விருதை ஹார்ரி புரூக் முதல் முறையாக வென்றார்.
இந்திய அணிக்காக பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் முதல் முறையாக ஐசிசி விருது பெற தேர்வானார், காயத்தில் இருந்து மீண்டு வந்து இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய ஜடேஜா இந்த விருதை வெல்லுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இங்கிலாந்து வீரர் ஹார்ரி புரூக் வென்று அசத்தியுள்ளார்.
இந்த விருதை பெற்ற பிறகு ஹார்ரி புரூக் அளித்த பேட்டியில், தனக்கு மிகவும் ஆதரவாக இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் தனது சக இங்கிலாந்து வீரர்களுக்கு நன்றி கூறினார், அதன்பின் இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கியது அடுத்து வர உள்ள ஆஷஸ் தொடர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் அணியில் இடம்பெற்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளேன் என்று கூறினார்.
ஐசிசி பிப்ரவரி மாதத்தின் மகளிர் பிரிவு விருதை ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் வென்றார், டி 20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஐசிசி பிப்ரவரி மாதத்தின் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.