ரோகித் சர்மாவை விமர்சிக்க தேவையில்லை.. கேப்டனால் எந்த மாற்றத்தையும் செய்திட முடியாது.. ஹர்பஜன் சிங் ஆதரவு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் அணித் தேர்வு, களத்தில் எடுத்த மோசமான முடிவுமே காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால் விரக்தியடைந்த ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மா கேப்டன்சியில் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் மொத்தமாக ஏமாற்றிவிட்டார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவின் ஃபிட்னஸ் பிரச்சனை, பேட்டிங் ஃபார்மும் அவரை மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இந்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆதரவாக பேசியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஹர்பஜன் சிங் பேசுகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பின், கேப்டன் ரோகித் சர்மா மீது அதிகப்படியான விமர்சனங்கள் வருவதை பார்க்கிறேன். கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. இந்த விளையாட்டில் ஒரு கேப்டனால் ஒரு போட்டியில் பெரிய மாற்றத்தை செய்திட முடியாது. இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது உண்மைதான். அதனை விமர்சிக்கலாம்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டே இருக்கக் கூடாது. அதேபோல் தோல்விக்கு பின் ரோகித் சர்மாவை மட்டும் விமர்சிப்பது சரியானதல்ல. என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா மிகச்சிறந்த கேப்டன். அவருடன் மும்பை அணியில் ஒன்றாக விளையாடி இருக்கிறேன். அண்மை காலங்களில் அவர் அடைந்த தோல்விகளில் இருந்து விமர்சிப்பது சரியல்ல. அவரின் செயல்பாடுகளை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
பிசிசிஐ ஆதரவு இருந்தால் கேப்டன் தனது பணியை எளிதாக செய்ய முடியும். தோனி, விராட் கோலி மட்டுமல்ல, அதற்கு முன்பாகவும் இந்திய கேப்டன்களுக்கு பிசிசிஐ ஆதரவு முழுமையாக இருந்துள்ளது. ஆனால் ரோகித் சர்மாவுக்கு அந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் விராட் கோலி, தோனி உள்ளிட்டோருக்கு வழங்கிய ஆதரவை பிசிசிஐ ரோகித் சர்மாவுக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.