இந்த உலகக் கோப்பை தொடரில் இந்த இளம் வீரர் இருந்தே ஆகணும்.. இல்லைனா நமக்குத்தான் சிக்கல்.. யாரைக் குறிப்பிட்டு பேசினார் ஹர்பஜன்சிங்..

ஒருநாள் உலகக் கோப்பை தொடர், இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி, அக்டோடர் 8ஆம் தேதி தனது முதல் லீக் போட்டியில், 5 முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. மொத்தம் 10 நகரங்களில் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், 9 நகரங்களில் இந்திய அணி லீக் போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளது. அரையிறுதி ஆட்டம் மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறும். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன் சிங், உலகக் கோப்பையில் இந்த இளம் வீரரை நிச்சயம் சேர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ஹர்பஜன் சிங், ''இந்திய அணிக்கு மிகவும் தேவையானது பார்ட்னர்ஷிப் தான். குறிப்பாக, ஓபனிங் பார்ட்னர்ஷிப் தான் மிகமிக முக்கியம். ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் இருவராலும் தான் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியும். ஷுப்மன் கில்லை சேர்க்க வில்லை என்றால், அது இந்திய அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும்'' என ஹர்பஜன் சிங் கூறினார்.
மேலும் பேசிய அவர், ''ஷுப்மன் கில்தான் இந்திய அணியின் துருப்பு சீட்டு. பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜாதான் துருப்பு சீட்டு. ஐபிஎலில் அபாரமாக செயல்பட்டதுபோல், உலகக் கோப்பையிலும் ஜடேஜா சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினால், இந்திய அணி நிச்சயம் வெற்றிகளை குவிக்க வாய்ப்புகள் இருக்கிறது'' எனத் தெரிவித்தார். ஷுப்மன் கில் சமீப காலமாக தொடர்ந்து மிரட்டலாக விளையாடி வருகிறார். ஆகையால், ரோகித் சர்மா மற்றும் கில் ஆகிய பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியும் எனக் கருதப்படுகிறது.