ஐபிஎல் 2023 : ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் குறித்து கௌதம் கம்பீர் விமர்சனம்.!! ரசிகர்கள் கொந்தளிப்பு..!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் மெண்டர் கௌதம் கம்பீர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தொடரை காண மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மிஸ்டர் 360 என்று அழைக்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பல போட்டிகளில் தோல்வியை தழுவும் நிலையில் இருந்த பெங்களூரு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஏபி டி குறித்து சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் பேசிய கௌதம் கம்பீர் கூறியது, ஏபி டி ஒரு சிறந்த வீரர் என்பது உண்மை ஆனால் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அதிக அளவில் சின்னசாமி மைதானத்தில் தான் விளையாடி உள்ளார் , அந்த மைதானத்தில் யார் வேண்டுமானாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என்று கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய கம்பீர், ஐபிஎல் தனக்கென பல ரெக்கார்டுகளை ஏபி டி வில்லியர்ஸ் படைத்துள்ளார் ஆனால் தனது அணிக்காக ஏதும் செய்யவில்லை சின்னசாமி மைதானத்தில் விளையாடினால் யார் வேண்டுமானாலும் தனிப்பட்ட சாதனைகள் படைக்கலாம் என்று கூறினார். இந்த பதிவை பார்த்த பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் ஏபி டி உடைய ரசிகர்கள் கெளதம் கம்பீரை பலவாறாக விமர்சித்து வருகிறார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக ஐபிஎல் தொடரில் விளையாடிய கம்பீர் மொத்தம் 11 போட்டிகளில் சின்னசாமி மைதானத்தில் விளையாடி உள்ளார், அதில் 126.36 ஸ்டிரைக் ரெட்டுடன் 30.02 சராசரியில் வெறும் 302 ரன்கள் பதிவு செய்துள்ளார், அதே சமயத்தில் பெங்களூர் அணிக்காக சின்னசாமி மைதானத்தில் மொத்தம் 61 போட்டிகளில் விளையாடி உள்ள ஏபி டி வில்லியர்ஸ் 161.18 ஸ்டிரைக் ரேட்டுடன் 43.56 சராசரியுடன் மொத்தம் 1960 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சின்னசாமி மைதானத்தில் விளையாடிய கௌதம் கம்பீர் உடைய பேட்டிங் ரெக்கார்டு உடன் ஏபி டி உடைய பேட்டிங் ரெக்கார்டை ஒப்பிட்டு இணையத்தில் பதிவிட்டு கடுமையாக கம்பீரை விமர்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.