உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி; அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஸ்காட்லாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே 8 அணிகள் தகுதி பெற்ற நிலையில் மீதம் உள்ள 2 அணிகளை தேர்வு செய்யும் தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 45 ரன்கள் எடுத்தார். ரொமாரியோ ஷெபார்டு 36 ரன்களும், பிரான்டன் கிங் 22 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஸ்காட்லாந்து அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் கிறிஸ்டோபர் மெக் பிரைட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து இணைந்த விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் மற்றும் பிராண்டன் மெக் முல்லின் இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரம் 2 ஆவது விக்கெட்டிற்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிராண்டன் 69 ரன்னில் வெளியேற, மேத்யூ கிராஸ்74 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 43.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஸ்காட்லாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த தோல்வி மூலம் 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்துள்ளது. 1975 மற்றும் 79 ஆம் ஆண்டுகளில் 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றதுடன், நூற்றுக்கணக்கான மேட்ச்சுகளில் எதிரணியை அலற விட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகக்கோப்பையில் விளையாட தகுதிபெறவில்லை. இந்த நிகழ்வு அந்நாட்டு ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.