மீண்டும் மீண்டும் இந்திய அணியில் புறக்கணிக்கப்படும் நடராஜன்... நல்ல ப்ளேயரை களத்திற்கு வெளியே காத்திருக்க வைப்பது, எந்த விதத்தில் நியாயம்?... ரசிகர்கள் காட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில், வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பெறாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டி20 அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தேர்வுக் குழு தலைவராக அஜித் அகர்கர் பொறுப்பேற்ற பின் தேர்வு செய்துள்ள முதல் அணி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதற்கேற்ப சீனியர் வீரர்கள் யாரும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் வழக்கம் போல் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கம் போல் சுப்மன் கில், சாஹல், அர்ஷ்தீப் சிங், உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் லக்னோ அணிக்காக சிறப்பாக ஆடிய ஆவேஷ் கான், டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முகேஷ் குமார், உம்ரான் மாலிக் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இளம் வீரர்களுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், சில மாதங்களுக்கு முன் மீண்டு களத்திற்கு வந்தார். அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதுமட்டுமல்லாமல் டெத் ஓவர்களில் நடராஜன் ஒருமுறை கூட சொதப்பவில்லை. அது மட்டுமல்லாமல் டி என் பி எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளிலும், திருச்சி அணிக்காக விளையாடும் நடராஜன் விக்கெட்டுகளை மளமளவென குவித்து ஜொலித்து வருகிறார். ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் விளையாண்ட அனுபவமும் இருப்பதால் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் நிச்சயம் நன்றாக ஆடுவார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் இந்திய அணிக்கு ஆடிய அனுபவமும் நடராஜருக்கு பலமுறை இருக்கிறது. இப்படிப்பட்ட விளையாட்டு வீரருக்கு வாய்ப்பே கொடுக்காமல் களத்திற்கு வெளியே காத்திருக்க வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று சிலர் காட்டமாகவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.