ஆஷஸ் 3வது டெஸ்ட்: பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? ஆதிக்கத்தை தொடர் காத்திருக்கும் ஆஸ்திரேலியா!

லீட்ஸ்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்க உள்ளது.
ஆஷஸ் தொடரை வெல்ல மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கில் பேஸ் பால் திட்டத்தை பின்பற்றும் இங்கிலாந்து அணி, பவுலிங்கில் என்ன திட்டத்தை வைத்துள்ளது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஹெட்டிங்லே மைதானத்தில் ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் நேதன் லயன் காயம் காரணமாக விலகியுள்ளதால், இங்கிலாந்து அணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. ஒருமுனையில் இருந்து நேதன் லயன் கட்டுக்கோப்பாக ரன்களை விட்டுக் கொடுக்காமல் வீசியதே ஆஸ்திரேலிய அணியின் இரு வெற்றிகளுக்கு மறைமுக காரணம். அவர் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், டங்க் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் போப் காயம் காரணமாக விலகியுள்ளார். இவர்கள் மூவருக்கும் பதிலாக மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் களமிறங்க உள்ளனர். மிதவேகத்தில் வீசி வரும் பிராட், ராபின்சன் உடன் அதிவேகமாக வீசும் மார்க் வுட் இணைவது ஆஸ்திரேலிய அணிக்கு சவாலை கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கும் 100வது டெஸ்ட் போட்டி இதுவாகும். சம காலத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை போல் ஒரு தரமான டெஸ்ட் பேட்ஸ்மேனை வேறு எங்கும் பார்க்க முடியாது. டான் பிராட்மேனுக்கு பின் அதிக சராசரியுடன் நீண்ட நாட்களாக விளையாடி வரும் வீரராக ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். இதனால் அவருக்காகவே வெற்றிபெற்று ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.