ஆஷஸ் தொடர்; மூன்றாவது போட்டிக்கான இங்கி. அணி அறிவிப்பு.. காயத்தால் ஆன்டர்சன் நீக்கம்.. அணிக்கு திரும்பிய மொயீன் அலி!

லண்டன்: ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் கைவசம் இருந்த ஆட்டத்தை சிறப்பாக விளையாடிய தன் வசப்படுத்திய ஆஸ்திரேலிய அணி வெற்றிவாகை சூடியது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 416 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரன்களும் எடுத்தது. அதேசமயம் முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆட்டம் இழந்த இங்கிலாந்து அணி, 91 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் வெற்றி இலக்கான 371 ரன்களை துரத்தி விளையாடியது.
அந்த அணியின் பென்ஸ் ஸ்டோக்ஸ் மட்டும் 155 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடிய நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அந்த அணியில் காயம் அடைந்த ஓலி போப், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஷ் டங்கு நாகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக மொயீன் அலி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:- ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், ஹாரி புரூக், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுர், ஓலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட்.